பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

187

அடுத்த மண்டபமே மகாமண்டபம். இத்தலத்தில் இதனைக் குலசேகரன் மண்டபம் என்று அழைக்கின்றனர். இதில் ஓர் உள் மண்டபமும், வேதிகையும் இருக்கின்றன. இந்த வேதிகையை விசுவநாதன் பீடம் என்கின்றனர். இந்த வேதிகையில் ராஜகோபாலன். ஆண்டாள், கருடன் எல்லோரும் எழுந்தருளியிருக்கின்றனர். இந்த ராஜகோபாலன் பக்கத்திலே குலசேகராழ்வார் உத்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.

இதற்கு வெளியே உள்ள கிளிக்குறடும் மண்டபமும் மணிமண்டபம் என்று பெயர் பெறும். இக்குறட்டிலிருந்து தென்பக்கத்துப் படிகள் வழியாக மாடிக்கு ஏறிச் சென்றால் அங்கு பரமபதநாதன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். இவரைச் சுற்றியுள்ள பிரதட்சிணமே யானை முடுக்கு என்று சொல்லப்படுகிறது. அதன்பின் அந்த மண்டபத்தின் கீழ்ப்புறமுள்ள படியாக மேலும் ஏறிச் சென்றால் அரங்கநாதன் போல் பள்ளிக்கொண்ட பெருமானைக் காணலாம். இப்படி, வேத நாராயணனாக நின்று, இருந்து கிடந்த கோலத்தில் எல்லாம் சேவை சாதிக்கிறான். இந்தப் பள்ளிக்கொண்ட பெருமானைச் சுற்றியுள்ள பிரதட்சிணத்தைப் பூனை முடுக்கு என்கின்றனர், இனி படிகளின் வழியாகக் கீழே இறங்கி வந்து வடபக்கத்துக்குச் சென்றால் அங்கு புவனவல்லித் தாயாரைக் கண்டு வணங்கலாம். அங்கேயே விஷ்வக்சேனரையும் தரிசிக்கலாம். அதன்பின் அங்குள்ள சின்னக் கோபுர வாயில் வழியாகக் கொடி மண்டபத்துக்கு வந்தால் வடக்கு வெளிட்ட பிராகாரத்தில் குலசேசுராழ்வார் சந்நிதிக்கு வரலாம். இவருக்குத் தனிக்கோயில், கொடிமரம், தேர் எல்லாம் ஏற்பட்டிருக்கும் சிறப்பைப் பார்த்தால் இவர் இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப் படுவதின் அருமை தெரியும். இங்கு கருவறையில் ஆழ்வார் கூப்பிய கையோடு எழுந்தருளியிருக்கிறார்.

குலசேகரர் இத்தலத்துக்கு வந்து தங்கியிருந்ததைப் பற்றி எத்தனையோ கதைகள். இங்கு இவர் வந்து தங்கியிருந்த காலத்தில் தன் ஆராதனை மூர்த்திகளான சக்கரவர்த்தித் திருமகனையும்,