பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231

பாவங்களையெல்லாம் கழுவித் துடைத்து முத்தி கொடுப்பவர். தோத் என்றாலே துடைப்பவர் என்று தானே பொருள்; கோயில், குளம், குளக்கரை, மரம் என்றெல்லாம் அமைந்து, காண்பார் நினைவில் எல்லாம் பக்தியை உண்டுபண்ணும் தலந்தான் அது. இத்தலத்தைப் பற்றிப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் பாடுகிறார்.

வானோர் முதலா
மரம் அளவா எப்பிறப்பும்
ஆனேற்கு அவதியிடல்
ஆகாதோ?-தேனேயும்
பூவர மங்கை
புவிமங்கை நாயகனே!
சீவர மங்கை அரசே!

என்பது பாடல். வானோர் முதல் மரம் வரை எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்த மனிதனுக்குப் பிறப்பே இன்றி முத்தியை அளித்தல் ஆகாதோ என்று கேட்டிருக்கிறார். அப்படி முத்தி அனிக்கவல்ல பதிதான் ஸ்ரீவரமங்கை என்னும் வானவாமலை என்றும் பாராட்டப் பெறும் நான்கு நேரி, அங்குள்ள தோத்தாத்திரி நாதர் கோயிலுக்குத்தான் செல்கிறோம் நாம் இன்று.

ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலம் திருநெல்வேலிக்கு நேர் தெற்கே பத்தொன்பது மைல் தொலைவில் இருக்கிறது. திருநெல்வேலி-நாகர்கோயில் பெருஞ்சாலை வழியாகத்தான் போக வேண்டும். கார் வசதியுடையவர்கள் காரிலேயே போகலாம். ஊருக்கு இரண்டு மைல் இருக்கும்போதே கோயில், கோபுரம், ஏரி எல்லாம் தெரியும். நான்கு ஏரிகள் அன்று இருந்து நான்கு நேரி என்ற பெயரை ஊருக்குத் தேடித் தந்திருக்கிறது. ஆனால் இன்று கோயிலை அடுத்திருப்பது ஒரு பெரிய ஏரிதான். ஏரிக் கரையில் பெரிய மரங்கள் எல்லாம் நிற்கின்றன. அந்த மரங்களின் ஊடே நீண்டுயர்ந்த கோபுரத்தைத் தாங்கிக் கொண்டு கோயில் இருக்கும்.