பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வேங்கடம் முதல் குமரி வரை

இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் குடைவரைக் கோயிலில், பிள்ளையார் திரு உருவம் அசைக்க முடியாத திரு உருவமாக அமைக்கின்ற வாய்ப்பு ஏற்படாதல்லவா? அந்தப் பிள்ளையார் பட்டிக்கே செல்கிறோம் நாம் இன்று.

பிள்ளையார்பட்டி ஒரு சிறிய ஊர், ராமநாதபுரம் ஜில்லாவில், காரைக்குடியிலிருந்து திருப்புத்தூர் செல்லும் வழியில் காரைக்குடிக்கு மேற்கே எட்டு மைல் தூரத்தில் இருக்கிறது. வழியில்தான் குன்றக்குடி முருகன் கோயிலும் இருக்கிறது. பெயரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், குன்றக்குடி முருகன், மலைமேல் நிற்பவன் என்று. மயில்போல் சரிந்து நீண்டிருக்கும் மலை மேல் கோயில் இருக்கிறது. ஏறுவது சிரமமாக இராது. ஆதலால் அண்ணனைத் தரிசிக்கப் போகும் இடத்தில் தம்பியையும் தரிசித்துவிட்டே மேல் நடக்கலாம். பிள்ளையார் பட்டிக்குத் திரும்பும் வழியில் பலகை நட்டு வழி காட்டியிருப்பார்கள் நெடுஞ்சாலைப் பொறியாளர். ஊருக்கு மத்தியில் கோயிலும் குளமும். குளத்தைச் சுற்றி அகன்ற வீதி.

நரசிம்மவர்மன் காலத்தில் உருவான குடைவரைக் கோயிலை மூலக் கோயிலாகக் கொண்டு பின்னர் இந்தக் கோயில் விரிந்து வளர்ந்திருக்கிறது. இப்படி விரிந்த கோயில் தான் இன்று மகாமண்டபம், ராஜகோபுரம் முதலியவைகளுடன் பெருங் கோயிலாக இருக்கிறது. இக்கோயிலில் கோயில் கொண்டிருப்பவர்தான் மருதங்குடி நாயனார். இந்த மருதங்குடி நாயனார் கோயிலை விரிவாகவும் அழகாகவும் கட்டி முடித்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார். கோயிலைக் கட்டி கோயிலுக்குமுன் ஒரு நல்ல குளத்தையும் வெட்டி, இவற்றைச் சுற்றி நல்ல நல்ல விடுதிகளையம் அமைத்து, தக்க முறையில் பாதுகாத்து வருகிறார்கள் பதினாறு காரியக்காரர்கள். இக் காரியக்காரர்கள்தான் பிள்ளையார்பட்டியான திருவேட்பூருடையார் என்ற கோத்திரத்தவர். இவர்களே கோவில் பூசை படித்தரம் முதலியவை சிறப்பாக நடைபெற (கோயில் வருமானம் போதாமல் இருப்பதால்) தங்கள் சமுதாய நிதியிலிருந்து கொடுத்து உதவுகிறார்கள்.

இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் இரண்டு பிரசித்தம். ஒன்று மார்கழித் திருவாதிரைத் திருநாள், இரண்டு