பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

71

காளையார் கோயிலைச் சுற்றியுள்ள சின்னஞ்சிறிய ஊர்கள் எல்லாம் இந்தப் புராண வரலாற்றை இன்றைக்கும் பாறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

தேவர்கள் தேவியைக் கண்டு குறையிரந்து நின்ற இடமே கண்டதேவி; தேவி தங்கியிருக்க தேவர்கள் நிருமாணித்துக் கொடுத்த கோட்டையே தேவிகோட்டை, அம்மை சண்டாசுரனை வெற்றிக்கண்ட இடமே வெற்றியூர்; சண்டாசுரனது தேரில் உள்ள கொடி இற்று வீழ்ந்த இடமே மாளக் கண்டான்; வெற்றி பெற்ற தேவியைப் பூமழை பொழிந்து தேவர்கள் வாழ்த்திய இடமே பூங்கொடி என்று இன்றும் வழங்கப்பெறுகின்றன. இப்படிக் காளியுருவில் இருந்த பார்வதியாம் பரமேட்டியை மணந்த ஈசுவரனே காளீசுவரனாகிறார். அந்தச் சுவர்ண வல்லியையும் தன் இடப்பாகத்தில் ஏற்றருளிய பின் சுவர்ண காளீசுவரனாகவே மாறுகிறார். இன்றும் காளையார் கோயில் மூலமூர்த்தி சுவர்ண காளீசுவரன் என்று தானே அழைக்கப்படுகிறான்,

காளீசுவரன் கானப்பேர் ஊரில் கோயில் கொண்டிருக்கும்போது இந்தப் பாண்டிய நாட்டை ஆண்டவன் வீரசேனன். இவனுக்குப் பழவினை வசத்தால் குழந்தை இல்லை. அதனால் இவனும் இவன் மனைவி சோபனாங்கியும் சுவர்ணத்தால் ஒரு பிள்ளையைச் செய்து வைத்து, அதைப் பார்த்துப் பார்த்துத் திருப்தி அடைகிறார்கள். சுவர்ண காளீசுவரனை வணங்க வந்த இந்தத் தம்பதிகள், கோயிலை அடுத்த உருத்திர தீர்த்தத்தில் முங்கி முழுகி எழுகிறார்கள் சுவர்ணப் பதுமையோடு, இறை அருளால் அந்தச் சுவர்ண புத்திரன் உயிர் பெறுகிறான். உடனே இறை அருளை நினைந்து, அங்குக் கோயில் கொண்டிருந்த காளீசர் சுவர்ணவல்லி, சோமேசர் சௌந்திரவல்லி யாவருக்கும் கோயில்கள் எடுப்பித்து, நித்திய நைமித்திக காரியங்களுக்கும் உற்சவாதிகளுக்கும் ஏராளமான நிபந்தங்களை ஏற்படுத்துகிறான்.

இந்த இரண்டு பெருமான்களை வணங்கி வாழ்த்துவதோடு அவன் திருப்தி அடையவில்லை. தன்னுடைய வழிபடு தெய்வமாகிய சோமசுந்தரரையும் மீனாக்ஷியையும் தரிசித்து வணங்காமல் தினமும் அவன் உணவு உண்பதில்லை. காளீசர் கோயில் கட்டும்