பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

127

சொல்ல, அவன் குருவாயூரப்பனை வணங்கி அந்த சாப விமோசனம் பெற்றிருக்கிறான். இன்னும் குருவாயூரப்பனின் அற்புத லீலைகள் அனந்தம்.

திப்பு சுல்தான் இப்பக்கம் படையெடுத்து வந்தபோது, அவனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தவர். குருவாயூரப்பன் - என்பார்கள். அவன் இக் கோயிலுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிபந்தங்கள் அனந்தம். அக்காலத்தில் ஹரிஜனங்களை கோயிலுள் அனுமதிப்புதில்லை. ஏகாதசி அன்று மட்டும் இந்த விதி விலக்கு உண்டு. ஒரு ஏகாதசி அன்று ஹரிஜனங்கள் பந்தி பந்தியாக கோயிலுள் நுழையும் போது ஒரு வயோதிக பிராம்மணர் வருந்தினாராம். அச்சமயம் கோயிலுள் இருந்த வில்வ மங்கள சாமியார் அந்த அந்தணரைத் தொட ஹரிஜனங்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு குருவாயூர் அப்பனாகக் காட்சி கொடுத்தார்களாம்.

இன்னும் பூந்தானம் நம்பூத்ரி என்பவர் ஒரு பிரார்த்தனை நூலை எழுதி, அதை நாராயணீயம் பாடிய மேல்பத்தூர் பட்டாத்திரியிடம் எடுத்துப் போன போது அதை அவர் அலக்ஷியப்படுத்தி விட்டாராம். ஆனால், பட்டாத்திரியின் கனவில் குருவாயூரப்பன் தோன்றி, உன்னுடைய வியக்தியை விட நான் பூந்தானத்தின் பக்தியையே மதிக்கிறேன் என்றாராம். இன்னும் ஒரு வயோதிகர் தனிவழி போனபோது, அவரைக் கள்ளர்கள் மறித்து அவர் உடைமைகளைப் பிடுங்க, அதையெல்லாம் குருவாயூரப்பனே மீட்டுக் கொடுத்தான் என்பர். இன்னும் இதுபோன்று எண்ணரிய அற்புதங்களை நிகழ்த்தியவர் தான் குருவாயூரப்பன். மலையாள மக்கள் இந்த அப்பனை, இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக வழிபடுவதில் வியப்பில்லை. மலையாள மக்களுக்கு மாத்திரம் என்ன, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனுக்குமே அவன் கண்கண்ட தெய்வம்தான் - அவனை வழிபட்டுப் பேறும் புகழும் அடைய எல்லோருமே விரையலாம் தானே!