பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வேங்கடம் முதல் குமரி வரை

அலைகளைக் காண்பித்தார். பின்னர் அதே கைகளால் அல்லி மலரும் அற்புதக் காட்சியையுமே காண்பித்தார். இவற்றின் மூலமாக அல்லிக்குளமே எங்கள் கண் முன் வந்தது.

நடன அரங்கில் தடாகத்தையும் தாமரை மலரையும் இப்படி நம் கண் முன் கொண்டு வந்தவரே, பின்னர் மேடை மீது மெதுவாய் நடக்க ஆரம்பித்தார். இரண்டு காலாலே நடந்தாலும், அவர் நடந்த நடை நாலுகாலால் நடக்கும் பெரிய யானையின் காம்பீர்ய நடையாகயிருந்தது.

ஒரு கை, யானையின் தும்பிக்கை போல மெல்ல மெல்ல நெளிந்து கொண்டே யிருந்தது. இப்படி நடந்த யானை தடாகத்தில் இறங்குவதாகப் பாவனை. அங்கு நீர் உண்பதாகவும், தும்பிக்கையால் நீரை வாரி இறைப்பதாகவும் சிறப்பாகக் காட்டினார் நடிகர். இப்படி நடித்த சில நிமிஷ நேரங்களில் அவரே உடலை வளைத்த வளைப்பில் முதலை தண்ணீருக்குள் நீந்தி வருகின்ற காட்சி எங்கள் கண் முன் வந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவரே, முதலை காலைப் பிடித்துக் கொள்ள அதனால் வீறிட்டு அலறும் யானையாக மாறினார்.

பின்னர் அவரே கருடனாக, கருடன் மேல் ஆரோ கணித்து வரும் பெருமானாக எல்லாம் மாறி விட்டார். மேடையில், ஆதிமூலமே என்றழைத்த கஜேந்திரனை முதலைப் பிடியினின்றும் விடுவித்து மோக்ஷமும் அளித்து விட்டார். இத்தனையையும் நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார் ஒரே ஒரு நடிகர், பத்து நிமிஷ நேரத்தில் மேடை மீது நின்று கொண்டே இந்த நடன நாடகத்தை ஆட, நடிகருக்கு எவ்வளவு கற்பனை வேண்டியிருந்ததோ, அதைப் போலவே நாடகத்தைக் காண்பவர்களும்