பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மறைக்காமல், அவை இருக்கும் வண்ணத்திலேயே கண்டு ரசித்து அவர் புகைப்படம் எடுத்ததே ஒரு தனி வரலாறு. புகைப்படக் கலை இன்று அடைந்திருக்கும் முன்னேற்றம் இல்லாத அந்தக் காலத்தில், டார்ச்லைட், சாக்பீஸ் பவுடர், தகரத்தகடுகள் (சூரிய ஒளியை சிலையின் மீது பாய்ச்ச ) போன்ற உபகரணங்களோடு அவர் புகைப்படம் எடுத்த பாங்கு சிற்பக்கலைபால் அவர் கொண்டிருந்த தணியாத தாகத்திற்கு சான்றாக அமையும். அவருடைய கட்டுரைகள் வெறும் தலபுராணம் அல்ல. அவை ஒவ்வொன்றும் தமிழ் இலக்கியச் சுவை மிகுந்தவை. பாடல் பெற்ற தலங்கள் என்று சொல்வதைப் போல, திரு. தொண்டைமான் அவர்களால் எழுதப்பட்ட தலங்கள் என்றும் கூறலாம். 'வேங்கடம் முதல் குமரி வரை' ஐந்தாம் பாகமாக வெளிவரும் இந்நூலில் பத்தொன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கேரளக் கோயில்களில் சில இதில் இடம் பெற்றுள்ளன. 'நவ தாண்டவம்' என்ற அவரது கட்டுரையில் தாண்டவங்களின் வகைகள், அவை காணப்படும் ஊர்கள் பற்றிய விவரங்கள் படித்து இன்புறத்தக்கவை. அது மட்டுமல்லாமல் நேரில் கண்டும் மகிழத் தக்கவை.

கோயில்களும், சிற்பங்களும் காலத்தால் அழியாதவை. அது போன்றே அவர் சொல்லால் அமைத்த காவியங்களும் காலத்தால் அழியாது. ரஸிகமணி டி. கே. சியை 'தாடியில்லாத தாகூர்' என்று கூறுவர். அதுபோன்றே தொண்டைமானை 'தமிழ்நாட்டின் ஆனந்தகுமாரசுவாமி' என்றால் மிகையாகாது.

இந்நூலை எனது ஊரைச் சார்ந்தவரும், பள்ளித் தோழருமான அருமை நண்பர் திரு. G. மாசிலாமணி அவர்களின் செல்வன் திரு. M. நந்தா அவர்கள் வெளியிடுவதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி.

சென்னை

ரா. ஜகத்ரட்சகன்.