பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வேங்கடம் முதல் குமரி வரை

நுழைந்தும், கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் ஒரு மூலையில், அந்த செவி சாய்த்த விநாயகர் சின்னஞ்சிறிய கல்லுருவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரையே பார்க்கிறீர்கள். அட்டைப் படத்திலே அவர் உட்கார்ந்திருக்கிற ஜோரைத் தான் பாருங்களேன். ஒரு காலை மடித்து ஒரு காலை ஊன்றித்தலை சாய்த்து, பாடலைக் கூர்ந்து கேட்டு கொண்டல்லவா இருக்கிறார். முகத்திலேதான் எத்தனை பாவம். இந்த செவிசாய்த்த விநாயகரைப் பார்க்கவே ஒரு நடைபோகலாம், அந்த அன்பில் ஆலந்துறைக்கு.

இன்றைக்கு நாட்டில் மக்களுக்கு எத்தனை எத்தனையோ குறைகள். அந்தக் குறைகளை எடுத்துக் கூற பத்திரிகைகள், மேடைப் பிரசங்கங்கள் வேறே. ஆனால் நாட்டிலே இருக்கும் ஆரவாரத்திலே, இப்படிக் குறைகளை எடுத்துக்கூறும் குரல் எல்லாம் நாட்டை ஆளுவோர் காதில் விழவா செய்கிறது? இவர்களுடைய காதையும் திருகி, இதையும் கொஞ்சம் கேளுங்கள் என்று சொல்ல ஓர் ஆலாந்துறையார் வேண்டியிருக்கிறது. ஆளுபவர்கள் பிடித்து வைத்த பிள்ளையார்களாக இராமல், செவிசாய்த்திருக்கும் விநாயகர்களாக மாற வேணும். இந்த ஆண்டின் விநாயக சதுர்த்தியிலே அப்படி இவர்கள் மாற இந்த செவி சாய்க்கும் விநாயகனையே வேண்டிக் கொள்வோம்.