பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வேங்கடம் முதல் குமரி வரை

ஆடற்பறவை உயர்த்த வெல் போர்
ஆழி அலவனை ஆதரித்தே.

என்பதே நம்மாழ்வார் பாசுரம். மாயக் கூத்தனையும் குளந்தை வல்லியையும் வணங்கி விட்டு துலை வில்லி மங்கலம் நோக்கி நடக்கலாம். ஆம் நடக்கவே வேணும். வாய்க்கால் கரை, வயல் வரப்பு உடங்காடு எல்லாம் கடந்தே துலை வில்லி மங்கலத்து இரட்டைத் திருப்பதி சேர வேண்டும். இந்தப் பயணம் எளிதானது அல்ல. பாதையும் சரியாய் இராது.

ஆதலால் காரில் ஏறிக்கொண்டு, வந்த வழியே திரும்பி ஸ்ரீவைகுண்டம் வந்து தாமிர பருணியின் தென்கரையிலே ஆறு மைல் தூரம் போனால் காமெல்லாபாத் என்ற முஸ்லீம் சகோதரர்களின் புதிய கிராமத்தண்டை வந்து சேருவோம். அங்கு ஆற்றின் தென்கரையிலே காரை நிறுத்திவிட்டு, இறங்கிக்கரை ஏறி ஆற்றைக் கடந்தால் துலை வில்லி மங்கலத்தில் உள்ள இரட்டைத் திருப்பதி வந்து சேருவோம். நல்ல உடங்காட்டிற்குள்ளே இரண்டு சிறிய கோயில்கள் ஒன்றை ஒன்று அடுத்து இருக்கும். ஒன்றிலே இருப்பவர் தேவர் பிரான். மற்றொன்றிலே நிற்பவர் அரவிந்த லோசனர். இவர்களையும், கருந்தடங் கண்ணி என்னும் தாயாரையும் தரிசித்து வணங்கி இந்த இரட்டைத்திருப்பதிப் பெருமாள்களைப் பற்றிப் பத்து பாடல்களை நம்மாழ்வார் பாடி மங்களா சாஸனம் செய்திருக்கிறார்.

சிந்தையாலும் சொல்லாலும்
செய்கையினாலும் தேவர் பிரானையே
தந்தை தாயென்றடைந்த சடகோபன்
என்றே தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார்.

இனி இரட்டைத் திருப்பதியை விட்டு தாமிரபரணியின் தென்கரை வந்து கார் ஏறி, கிழக்கே ஒன்றரை மைல் சென்று வடக்கே திரும்பினால், தென்திருப்பேறை