பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

155

வழக்குப் பதிவு பெறவிருந்த எண்பது பெயர்களையும் சிறைக்குக் கொண்டு சென்று காவலில் வைக்கின்ற நிலை ஏற்படவிருந்ததால், காவல் அதிகாரிகள் உள்ளே இருப்பவர்கள் தம் தம் உடைமைகளையும், விலை மதிப்புள்ள பொருள்களையும், பணங்களையும் வைத்துக் கொள்ளக் கூடாதென்றும், அவ்வாறு இருந்தால் அவர்கள் வெளியிலுள்ள பொறுப்பானவர்களிடம் கொடுத்துவிடலாம் என்றும் கூறினர். அதன்படி அன்பர்கள் வரவழைக்கப் பெற்றனர். அவர்களிடம் எல்லாருடைய பணம், பெட்டி, துணி முதலிய பொருள்கள் பெண்களின் நகை நட்டுகள் முதலியவை வைப்பகத்திலோ வேறிடத்திலோ வைத்திருக்குமாறு ஒப்படைக்கப் பெற்றன.

இதற்கிடையில் அதிகாரிகள் பரபரப்போடு இயங்கியில் வெளியே போவதும் வருவதுமாக இருந்தனர். அடிக்கடி தொலைபேசித் தொடர்புகள் நிகழ்த்தப் பெற்றன. மாலை 6 மணியளவில் அதிகாரி ஒருவர் மாநாட்டு அமைப்பாளரை அழைத்து, எல்லாரும் விடுதலை செய்யப் பெற்றனர் என்று கூறி, எல்லாரையும் அமைதியாகக் கலைந்து போக ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். அச் செய்தியை அமைப்பாளர் அன்பர்களிடம் தெரிவித்து, எல்லாரும் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டிக்கொண்டு, அன்று இரவு 9 மணிக்கு அப்சரா விடுதியில் பொதுக்குழுக்கூட்டம் நடக்குமென்றும் அக்கூட்டத்திற்கு அன்பர்கள் அனைவரும் தவறாது வரவேண்டுமென்றும்; அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி அங்கு ஆராயப்பெறும் என்றும் சொன்னார். அதன்பின் விடுதலை முழக்கங்களுடன் விடுதலை மறவர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினர்.

இரவு 9.30 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் தலைமையில் கூடியது. மறுநாள் மாநாடு நடத்துவதா வேண்டாவா என்ற கருத்து பற்றித் தனித்தனியே ஒவ்வொருவரிடமும் கேட்கப் பெற்றது. விடுதலையுணர்ச்சி உள்ளவர்களின் மனநிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே அதன் நோக்கம். பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்திருந்த அறுபது பெயர்களில் ஐம்பத்தைந்து பெயர்கள் மறுநாள் எப்படியும் மாநாட்டை நடத்தியே தீரவேண்டும் என்று உணர்ச்சியுடன் முழங்கினர். ஐந்து பெயர்கள், இக்காலம் நமக்குக் கருத்தறிவிப்புக் காலம் என்றும், எனவே நாம் போராட்டத்தில் கவனம் செலுத்தக் கூடாதென்றும், அது போராட்டக் காலத்தில் நடைபெற வேண்டிய