பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வேண்டும் விடுதலை

ஒன்று என்றும், கூறினர். அமைப்பாளர் அவர்கள் இருசாரார் கருத்தையும் அமைதியாகக் கேட்டிருந்துவிட்டு, "எதிர்க்கருத்துகள் சிறுபான்மையினரால் கூறப் பெற்றாலும், நான் அவற்றில் மிகவும் கவனம் செலுத்துகின்றவன்; அவற்றை ஆராய்கின்றவன். ஒரே ஒருவர் தம்மில் மாறுபட்டாலும்கூட அவர் மாறுபடுவது ஏன் என்னும் விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வதிலே நான் அக்கறையுள்ளவன். அவர் நம் கருத்துகளை விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக அவற்றைப் பலவாறு விளக்க அணியமாக விருக்கின்றவன். பெரும்பாலும் நாம் எல்லாரும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒருவர் மாறுபட்டாலும் அவரைப் புறக்கணிக்கக் கூடாது. கூடிய வரையில் அவரையும் இணக்கத்திற்குக் கொண்டுவரவே முயல வேண்டும். இப்பொழுது மாநாட்டைத் தொடர்ந்து நடத்துவதில் நமக்குள் மாறுபாடான கருத்து இருக்கக் கூடாது. மாநாட்டை நடத்துவதா, இல்லையா, எங்கு, எப்படி நடத்துவது என்பது நாளை காலையில் செய்யப்பெறும் ஒரு சட்ட முயற்சிக்குப் பின் அன்பர்களுக்கு அறிவிக்கப்பெறும். இது கொள்கைப் பரப்புக் காலந்தான் என்பதை அறிவேன். இப்பொழுதும் நாம் கொள்கையைப் பரப்புவதற்குத்தான் மாநாடுகளை நடத்துகின்றோம். நாம் திருச்சி மாநாட்டில் தீர்மானித்துக் கொண்டபடி இக் கொள்கைப் பரப்புக் காலத்தில் சரிவரச் செயல்படாமைக்குக் கரணியம் பொருளியல் வலிமையின்மையே! பொருளை வைத்துக் கொண்டிருப்பவர்களெல்லாம் இதில் ஈடுபடத் தயங்குகின்ற பொழுது, பொருளில்லாத நிலையில் நாம் இவ்வாறு ஈடுபடுவது கூட, மிகப் பெரிய செயல்தான். 'நாடு பிரியவேண்டும்’ என்று கருத்தறிவிக்கவே எல்லாரும் அஞ்சுகின்ற காலத்தில், நாம் பிரிவினை மாநாடு என்று வெளிப்படையாகக் கூட்டுவது மிகவும் அரிய செயல் என்பதை நீங்கள் உணர வேண்டும். எனவே, அன்பர்கள் சிலர் குறைப்பட்டுக் கொண்டது போல், கொள்கைப் பரப்புக் காலத்தில் நாம் சரிவரச் செயல்படவில்லையே என்றும் எவரும் மனச்சோர்வு கொள்ள வேண்டாம். முதலில் நம்மை அந்நிலைக்குப் பக்குவப்படுத்திக் கொள்வதும் ஒரு முயற்சிதான். இன்று நம் ஊர்வலத்தின் முடிவில் நடந்த சில தொய்வுகளைப் பற்றி அறிவீர்கள். நாம் முனைப்பாளர்கள். நாம்தாம் கொள்கைகளைப் பரப்ப வேண்டும். நமக்குள்ளேயே சிலர் தெளிவற்று இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாம் தெளிவேற்ற வேண்டும். அதுவும் ஒரு முயற்சியே! சும்மா வாயளவில் கொள்கையைச் சொல்லிக் கொண்டிருப்பது வேறு. செயலளவுக்கு அதைக் கொண்டுவருவது வேறு. செயலுக்கு