பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

157

வரும்பொழுது அதில் பலவகையான இழுப்பு பறிப்புகள் இருக்கவே செய்யும். அஃது அவரவர் மனநிலைகளைப் போறுத்தது. கொள்கைப் பரப்புக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டா என்று அன்பர் சிலர் கேட்டுக் கொண்டனர். உண்மைதான். நாம் இப்பொழுதுங்கூட கொள்கையைப் பரப்புவதற்குத்தான் மாநாட்டைக் கூட்டினோம். இது போன்ற மாநாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் கவனமும் அரசினர் கவனமும், செய்தித்தாள்களின் கவனமும் நம் பக்கம் திரும்பும். அப்பொழுதுதான் நாம் சொல்வதை அவர்கள் எண்ணிப் பார்க்க முயற்சி செய்வர். அந்த முயற்சியைத்தான் நாம் இப்பொழுது செய்தோம். அதற்குத்தான் இப்பொழுது தடையிட்டிருக்கின்றார்கள். மாநாடு நடைபெறவிருந்த மன்றம் சாத்திப் பூட்டி முத்திரையிடப் பெற்றுக் காவலர்களால் காக்கப் பெற்று வருகின்றது. நம்மை அமைதியாக ஊர்வலம் நடத்தவும், மாநாட்டை நடத்தவும் விட்டிருந்தார்களானால் இந்த மதுரையில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படி நடைபெறுவதை இந்த அரசு விரும்பவில்லை போலும்! கொள்கையைப் பரப்பும் முயற்சியில்தான் ஈடுபட்டோம் போராட்டத்திலன்று. ஆனால் அதற்கே இப்பொழுது தடையிடப் பெற்றுள்ளது. கொள்கை பரப்பப்படும் பொழுது அது தடுக்கப் பெறுமானால் அதனை மீறுவதும் ஒரு முனைப்பான கொள்கை பரப்புச் செயலே யாகும்; போராட்டம் ஆகாது. எனவே அன்பர்கள் எதற்கும் அணியமாக விருக்க வேண்டும். நாளை காலை 9 மணிக்கு மேற்கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிவிக்கப் பெறும். அன்பர்கள் பலருடைய உணர்ச்சியையும் நான் நன்கு அறிவேன். சிலர் இப் போராட்டத்திலீடுபட்டு எத்தனை ஆண்டுகளேனும் சிறைக்குச் செல்ல அணியமாக விருக்கின்றார்கள் என்றும் எனக்குத் தெரியும். சிலர் கூட்டத்தோடு வந்துவிட்டோமே, நடவடிக்கைகள் கடுமையாக விருந்தால் என்ன செய்வது என்று அலமருகின்றதையும் அறிவேன். அனைவரும் காலை வரை பொறுத்துக் கொள்ளுங்கள். காலையில் எல்லாம் தெரிந்துவிடும். நீங்கள் இப்பொழுது அமைதியாகப் போகலாம்” என்று விரிவாக எடுத்துரைத்தார். இரவு பதினொன்றரை மணியளவில் கூட்டம் முடிவுற்றது. அதன்பின் ‘கைகாட்டி’ ஆசிரியர், திரு. தமிழ்க்குடிமகனும் உடுமலைப்பேட்டை திரு. இறையனும் வந்து அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் அவர்களைப் பார்த்துப் பேசிச் சென்றார்கள். இருவரும் மாநாட்டுச் செய்தி மிகவும் பரபரப்பூட்டி யிருப்பதாகவும், அரசுவரை எட்டியிருப்பதாகவும் சொன்னார்கள். அன்றையச் செய்தி