பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

253

வலித்தமான ஒன்றிணைந்த கொள்கையாக, உணர்வாக இருத்தல் வேண்டும். இந்தக் கருத்து, இன்றுள்ள சூழலில் இயலாமல், அல்லது, நிறைவேறாமல் இருக்கலாம். நாளைக்கும் அது நிறைவேறக்கூடாது என்றிருக்கலாமா? எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம்.

ஆங்கிலத்தை நாம் விரும்பிக் கற்கலாம்; அதன்வழி, இன்றுள்ள அறிவியல் பயனையும் நாம் பெறலாம். ஆனால், வாழ்வியல் பயனையும், இழந்துபோன உரிமைகளையும், இனநலத்தையும் நாம் நம் தாய்மொழி வழியாகத்தானே பெறமுடியும்!

இந்தியோ எதற்கும் பயன்படாத ஒரு வெற்றுமொழி. இந்திய தேசிய நீரோட்டம் இந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்பதற்காக மட்டுமே இந்தியைக் கற்கவும், தொழில்மொழியாக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அதனால் முழுப்பயன் பெறுபவர் அல்லது பெறப்போகிறவர்கள் வடநாட்டுக்காரர்களும் இந்தி வெறியர்களும் பார்ப்பனர்களுந்தாம். தமிழரோ, இந்தியால் என்றுமே இரண்டாந்தரக் குடிமக்களாகவே இருக்க முடியும். ஆங்கிலத்தை ஏற்பதும் ஓரளவு இத்தகைய விளைவைத்தானே ஏற்படுத்தும்? ஆங்கிலத்தை, நம் தமிழ்மொழியை இன்றைய அறிவியல் வாழ்க்கைக்கேற்பத் தகுதியுடையதாகச் செய்வது வரையே, பயன்படுத்திக் கொள்ளும்படி செய்தல் வேண்டும். இறுதிவரையிலான, நிலையான முடிவு ஆங்கிலமே என்று இருக்கும்படி நாம் ஏற்றுக்கொள்ளவும் கூடாது; அவ்வாறு காலப் போக்கில் ஆகிவிடும்படி நாம் விட்டு விடவோ திட்டமிடவோ கூடாது.

ஏற்கனவே, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் ஆங்கிலத்தையும், பிரெஞ்சையும் செருமனியையும், சீன, உருசிய, மொழிகளையும், அந்தந்த நாடுகளில் படித்தும் பேசியும் வருவதுடன், தங்கள் தாய்மொழியான தமிழைப் படிக்க வாய்ப்பின்றியும், மறந்தும் வருகின்றனர். அத்தகைய நிலை ஆங்காங்குள்ள சூழல்களாலும் ஏற்படுகிறது. அந்த நிலைகளைத் தடுக்கவும் அவர்களுக்கிருக்க வேண்டிய தமிழ் ஈடுபாட்டை வளர்த்தெடுக்கவும் ஆன கவலையும், முயற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டிய இந்நேரத்தில், நம் அனைத்து முயற்சிகளும், போராட்டங்களும், நம் தாய்மொழியான தமிழை நோக்கியும், இன அடிமை நீக்கத்தையும் உரிமை மீட்பையும், நாட்டு விடுதலையையும் கருத்தில் கொண்டுமே செய்யப்பட வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாதது.