பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

வேண்டும் விடுதலை

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு முழு அதிகாரம் கொண்ட மாவட்ட அமைப்புகள் மாவட்டக் குழுவாட்சி முறை (District Board Administration) என்று ஒரு முறையிருந்தது. அதில், இன்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் (District Collector), வட்டாட்சித் தலைவர்(Tashildar) ஆகியோருக்குள்ள பெரும்பாலான அதிகாரங்கள் கொண்ட குழு ஒன்று செயல்பட்டுச் சிற்றூர்புறங்களில் உள்ள கல்வி, சாலை அமைப்பு, ஊர்ப் பாதுகாப்பு, தண்ணீர் வசதி முதலியவற்றைக் கவனிக்கவும் அவற்றுக்கான பொருள் ஒதுக்கீடு செய்யவும் போதுமான அதிகாரம் பெற்றிருந்தது. மாநில அரசும் அதற்குப் போதுமான பொருள் ஒதுக்கீடு செய்து வந்தது. அந்த மாவட்டக் குழுவாட்சி உறுப்பினர்களும் தேர்தல் வழியாகத்தான் தேர்ந்தெடுக்கப் பெறுவார்கள். ஆனால் பேராயக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றுக் காமராசர் முதலமைச்சராக வந்தபின் அம் மாவட்டக் குழு ஆட்சி முறையைத் தவிர்த்து விட்டுச் சிற்றுார்ப் புறங்களை ஊராட்சி மன்றங்களின் ஆட்சிப் பொறுப்பிலும், அவற்றைப் படிப்படியாக ஆளுகின்ற அதிகாரத்தை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பொறுப்பிலும் உட்படுத்தினார். ஆனால் அனைத்து அதிகாரங்களும் மாநில அமைச்சரவைக்கு உட்பட்டிருந்தன.

இதுநாள் வரையிருந்த இம்முறையை மாற்றி மாநில அமைச்சரவைக்கு உட்பட்டிருக்கும் அதிகாரங்களைக் குறைத்து, பொருள் ஆட்சி உட்பட அவற்றை நேரடியாகச் சிற்றூர்ப்புற ஐந்தாயங்களே(பஞ்சாயத்துக்களே) ஆளுமை செய்யும்படி, அதற்கு அரசியல் அமைப்பியல் சட்டத்தில் உள்ள 64-ஆவது பிரிவை விரிவுபடுத்திப் புதுச் சட்ட அமைப்புகளை இப்பொழுது ஏற்படுத்தியுள்ளது இராசீவ் அரசு.

இப்படிச் செய்ததன் வழி, நடுவண் அரசு, சிற்றூர்ப்புற ஐந்தாய ஆட்சியோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு தனக்கேற்றவாறு, சிற்றூர் ஆட்சியை அமைத்துக் கொள்ள முடியும். நடுவணரசு கொணரும் திட்டங்கள் அனைத்தையும் எவ்வகை மறுப்பும் இன்றி அச்சிற்றூர்ப்புற அமைப்புகள் செயல்படுத்தியாக வேண்டும் என்னும் கட்டாயம் அவற்றுக்கு உண்டு. இதனை நடுவணரசுக்கு வேண்டாத அல்லது வேறான மாநில அரசுகள் தடைப்படுத்த முடியாது. இப்பொழுதுள்ள நிலையில் நடுவணரசு போடும் திட்டங்களை எதிர்க்கட்சிகளின் கைகளில் உள்ள மாநில அரசுகள்