பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

319

மறுக்கலாம், அல்லது தவிர்க்கலாம். இனி அவ்வாறு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதுநாள் வரை மாநில அரசுகள் சொல்வதை, நேற்று வரையிருந்த ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் மறுக்க இயலாது. மாநில அரசுகளின் கட்டளைப்படி அவை செயற்பட்டாக வேண்டியிருந்தது. இனி, ஐந்தாய அமைப்புகள் அவ்வாறு செயல்பட வேண்டிய தேவையில்லை. ஆனால் நடுவணரசு இடும் கட்டளைப்படி மாவட்ட ஆட்சி அமைப்புகளும், அவற்றின் வழி ஊராட்சி ஒன்றியங்களும், அவற்றின் வழி ஐந்தாயங்களும், செயல்பட வேண்டியிருக்கும். இதில் மாநில அரசுகள் குறுக்கிட முடியாது. இம்மாறுதல்களால், மாநிலங்களுக்குள்ள அதிகாரங்கள் உரிமைகள் தவிர்க்கப்படுகின்றன; தகர்க்கப்படுகின்றன. இதுதான் ஐந்தாய அமைப்பால் மாநில அரசு இழக்கின்ற உரிமை. இந்த உரிமையை நடுவணரசு நேரடியாகக் கைப்பற்றிக் கொள்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வழியாக இந்த அதிகாரச் செயல்பாடுகள் நேரடியாகவே நடுவணரசால் நிகழ்த்தப் பெறும். பொருளதிகாரத்தைக் கொண்டும் கூட மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் உள்ள சிற்றூர்களை இனி மிரட்ட முடியாது; பணிய வைக்க முடியாது; தங்கள் சார்பாகத் திருப்ப முடியாது. அந்தப் பொருள் ஒதுக்கீடும், நடுவணரசு வகுத்துக் கொடுக்கின்ற முறையில், மாநிலப் பொருள் குழு ஐந்தாயங்களுக்கு இயல்பாகவே ஒதுக்கியாக வேண்டும். இதிலும் மாநில அரசு தன் அதிகாரத்தைக் காட்ட முடியாது. வரவு செலவுக் கணக்குகளைப் பார்க்கின்ற அதிகாரத்தைக் கூட நடுவணரசு மாநில அரசுகளுக்கு விட்டு வைக்கவில்லை. அதைக் கூட நடுவணரசின் அதிகாரத்தில் உள்ள மாநிலத் தணிக்கை அதிகாரி பார்த்துக் கொள்வார்.

இம் முறைகள் பற்றி வெளிப்படையாக - பச்சையாகச் சொல்வதானால், வேர்கள் நேரிடையாகக் கிளைகளொடு தொடர்பு கொள்ளும். அடிமரம் வழியாகத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. எனவே கிளைகள் அடிமரத்துக்கன்று, வேர்களுக்கே நன்றிக் கடன் ஆற்றும். இதனால், மாநிலத்தில் எந்தக் கட்சி, ஆட்சி அமைக்கிறது என்பதுபற்றி நடுவணரசுக்குக் கவலையில்லை. நடுவணரசில் உள்ள கட்சிக்குத்தான் நாடு முழுதும் கடமைப்பட்டிருக்கும்.

எனவே, இனி மாநிலத்தன்னாட்சி (மாநில சுயாட்சி) என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமன்று, தனிநாட்டுக்