பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

வேண்டும் விடுதலை

தமிழர்களின் இன, நாட்டு, அரசியல் முன்னேற்றத்தில் ஒரு சிறந்த திருப்பு முனையுமாகும். இதனால் தமிழரின் தேசிய இனத் தன்னுரிமைக் கோரிக்கைக்கு ஒரு வலிவும், தமிழ்நாட்டின் தனியாட்சிக் கொள்கைக்கு ஒரு பொலிவும் உண்டாக்கியிருக்கின்றன என்பதை எவரும் மிகையென்று கூறமுடியாது. பாட்டாளி மக்கள் கட்சியை, அதன் அமைப்பாளராகிய பெருமை மிகு மருத்துவர் இராமதாசு தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய கட்சியாகவும் தலைமையாகவும் இதன்வழி அடையாளம் காட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். வெறும் 'சாதிக் கட்சி' என்றும், 'பிரிவினை'வாதக் கட்சி என்றும், வன்முறைக் கட்சி என்றும், அதில் உள்ளவர்களும், அதை ஆதரிப்பவர்களும், தீய சக்திகள் என்றும், 'தேசத் துரோகிகள்' என்றும், பார்ப்பனர்களோ, அவர்களின் இதழ்களோ, வடநாட்டு வல்லதிகாரக் காரர்களோ — இனிமேலும் அதையும் அதைச் சார்ந்தவர்களையும் எளிதாகக் குறைகூறி அல்லது குற்றஞ் சாட்டி, அதன் வளர்ச்சியைத் தடுதது நிறுத்திவிட முடியாது. இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழர்களுக்கென்று இலங்கையிலும், ஏன் இந்தியாவிலும் கூட ஒரு தனித்தமிழீழமும், தனித்தமிழ்நாடும் உருவாவதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

ஒரு தேசிய இனம் புதிதாக உருவாவதையே எந்த ஆற்றலாலும் தடுத்துவிட முடியாதபொழுது, ஏற்கனவே பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி, அதற்கான மொழி, வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவற்றைத் தனித்தன்மையுடன் படைத்துக் கொண்டு ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகள் அரசு, ஆட்சி வரலாறுகளையும் பெற்றிருக்கின்ற தமிழினம், இன்றைய வடநாட்டுப் பார்ப்பனீய, முதலாளிய இந்தி வெறியர்களிடம் தன்னுரிமையும், தனியாட்சியும் கேட்கக் கூடாது. என்பது, முட்டாள்தனமும், முரட்டுத்தனமும் ஆகும் என்பதை அனைவருமே உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

இந்த ஆட்சி வெறியர்களுக்கு, இங்குள்ள பொதுவுடைமைக்காரர்களும் துணையாக நிற்பதுதான் நமக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவர்கள் நடத்தும் வகுப்பு(வர்க்க)ப் போராட்டம், தேசிய இனம் விடுதலை பெறாத நிலையில் பொருளற்றது; விணானது. இதுபற்றி மார்க்சு தெளிவாகத் தெரிவிக்கிறார்.