பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டும் விடுதலை

அக்கறை கொண்ட கட்சிகளை இணைத்துத் 'தமிழக மக்கள் விடுதலை முன்னணி' — எனும் முயற்சியை வரலாற்றில் முதன்முதல் ஆற்றியதும் தென்மொழியே.

'மிசா'க் கொடுஞ்சிறையில் தனித்தமிழ்நாட்டு முயற்சிக்கெனச் சிறைப்பட்டவர் பாவலரேறு ஒருவர் மட்டுமே என்பதும், 'மிசா', 'தடா' — எனக் கொடுஞ் சட்டங்களாலும், தமிழக விடுதலைக்கெனப் பதினெட்டு முறைக்கும் மேலாகச் சிறை சென்றவருமாகப் போராட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் பாவலரேறு என்பதும் தமிழக வரலாற்றுப் பதிவுகள்.

தமிழ்த் தேச முயற்சிக்குத் தந்தையாக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஐயா அவர்களின் போராட்ட முயற்சிகள் எதிர்கால இளைஞர்களுக்குப் போர்வாள்! அவரின் ஆற்றல் சான்ற எழுத்துகள் தமிழ்இன உணர்வினர் பட்டைத் திட்டிக் கொள்ளுகிற கற்பாறை! அவரின் நெஞ்சுறுதி தமிழர்களுக்கு உள்ளவூற்றம்!

ஐயா அவர்களின் அத்தகைய விடுதலை வேண்டுகைக்கான ஆற்றல்சான்ற எழுத்துகளை ஒருசேரத் தொகுத்தே 'வேண்டும் விடுதலை' — எனும் தலைப்பிட்டு இந்நூல் கொண்டுவரப் பெற்றிருக்கிறது.

தென்மொழி, தமிழ்நிலம், தமிழ்ச்சிட்டு, தீச்சுடர் இதழ்களில் எழுதப்பெற்ற தமிழ்நாட்டு விடுதலைத் தொடர்பான, கட்டுரைகளும், நிகழ்வுப் பதிவுகளும் இத் தொகுப்பு நூலுள் காலவரிசைப்படி உள்ளன. அதேபோது இவைகுறித்துப் பாவலரேறு அவர்கள் எழுதிய நூற்றுக்கும் மேலான பாடல்கள் இத் தொகுப்புள் இடம்பெறவில்லை. அவை 'கணிச்சாறு' — எனும் 'பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்' தொகுப்பில் 'நாட்டுரிமை' எனும் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளன.

இத் தொகுப்பு நூலுக்கு ஐயா அவர்கள் எழுதிய 'வேண்டும் விடுதலை' — எனும் ஆசிரியவுரைத் தலைப்பே இடம்பெற்றிருக்கிறது.