பக்கம்:வேமனர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"நன்னயரின் நடையிலும் புலப்படாத முறையில், திக்கனரின் நடைக்குச் செல்லுகின்றது இந்த இலக்கியம்".மகாபாரதத்தின் இந்த மூன்று மொழி பெயர்ப்பாளர்களும் தெலுங்குக் கவிதையின் முக்கவிகள் (கவித்திரயம்) என்று ஒருசேர சிறப்பிக்கப் பெறுகின்றனர். எர்ரப்பிரகடா வேறு நூல்களையும் செய்துள்ளார்; அவற்றுள் மிகச் சிறந்தது ஹரி வம்சத்தின் மொழி பெயர்ப்பாகும். இவருடைய தனிப்பட்ட சிறப்புப் பெயர் பிரபந்த பரமேஸ்வரர்” என்பது: "பிரபந்தங்களின் தலைவர்" என்பது இதன் பொருளாகும்.

கடப்பை: இராயர் சீமையில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர்: இதன் தலைநகரின் பெயரும் இதுவே.

கண்டிகோட்டா : இது கடப்பை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய நகரம். நகரைச் சுற்றிப் பழைய கோட்டையொன்றும் உள்ளது. வேமனரின் மூத்த சகோதரர் சில காலம் இந்தக் கோட்டையின் தலைவராக இருந்தார் என்ற செய்தி வழங்கி வருகிறது. இதற்குத் தக்க ஆதாரம் இல்லை.

கபீர்:இடைக்கால இந்தியாவிலிருந்த மிகச் சிறந்த மறைமெய்மையாளர்களுள் ஒருவர். இவர் பிறந்த நாள் பற்றிக் கற்று அறிந்த புலவர்களிடையே இன்னும் முடிந்த முடிபு ஏற்படவில்லை; இவர் இறந்த நாள் பற்றியும் இதேநிலைதான்: ஆயினும் பெரும்பாலோர் இவர் காலத்தை 15-ம் நூற்றாண்டு என அறுதியிட்டுள்ளனர். இவருடைய பெற்றோர்கள் பற்றியும் கருத்து வேறுபாடு உள்ளது. இவர் பெற்றோர்கள் இஸ்லாம் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றும், பிராமணக் கைம்பெண் ஒருத்தியால் கைவிடப் பெற்று இஸ்லாமியப் பெற்றோர்களால் வளர்க்கப் பெற்ற குழந்தையென்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. நெசவுத் தொழிலை மேற் கொண்டிருந்தவர். இராமாநந்தரின் சீடராகிய இவர் சமய வெறியைப் பழித்துக் கூறியவர்; ஒரே கடவுளே வழிபட வேண்டுமென்று பரிந்துரைத்தவர். இக்கடவுள் அல்லாவாகவோ இராமனாகவோ இருக்கலாம் என உரைத்தவர்.

கர்நாடகம்: கன்னடமும் கர்நாடகமும் ஒரு பொருட் சொற்கள்: "ஆந்திரம் என்ற சொல்லைப் போலவே இவை மக்களையும் குறிக்கும்; நாட்டையும் காட்டும்; மொழியையும் உரைக்கும். ஆந்திரத்திற்குத் தென்மேற்கில் கர்நாடகர் மைசூர் மாநிலத்தைக் கொண்டுள்ளனர். மைசூர் மாநிலம் இப்பொழுது கர்நாடக மாநிலம் என்ற பெயரில் வழங்கி வருகிறது.

7-A

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/112&oldid=1256282" இலிருந்து மீள்விக்கப்பட்டது