பக்கம்:வேமனர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களைத் தாக்கும் சூறாவளிக் காற்றாகவும் உள்ளது; இந்த அளவு கோலின் அடுத்தகோடியில் அது விரைவான மாற்றங்களை ஏற்றுக் கோடைக்குப்பிறகு தோன்றும் முதல் மாரியாகவும், குளிர்ந்து வீசும் தென்றலாகவும், அதிகாலையில் கேட்கப்பெறும் பறவைகளின் பாட்டாகவும் அமைந்துவிடுகின்றது.

1950-ல் சென்னை வானெலியில் ஒலிபரப்பான பேச்சில் டாக்டர் சி.ஆர்.ரெட்டி அவர்கள் கூறுவதுபோல், வேமனர் "இயற்கையைப் பற்றிப் பாடும் கவிஞராகவும் இயல்பான கவிஞராகவும் திகழ்கின்றார்’’. இங்கு அவரது திறனாய்வு மதிப்பீட்டின் ஒரு சில வாக்கியங்களே அப்படியே மேற்கோளாகக்காட்டுவோம்:

படித்தவர்தான் என்ற போதிலும் அவர் ஒரு புலவர் அல்ல. ஆனால், ஆழ்ந்த சிந்தனையையுடையவர்: வாழ்க்கையையும், அதன் உலகியல் பற்றியனவும் ஆன்மிக இயல்பற்றியனவுமான பிரச்சினைகளை ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலையும் ஊடுருவிப்பார்க்கும் உள்ளுணர்வையும் பெற்றவர். இத்தகைய திறன்களைக் கருவிலே அமையப்பெற்ற இவருடைய கவிதை சிந்தனையிலும் நடையிலும் சுயமானது; முற்றிலும் தானாக இயல்பாக எழுவது; கறைப்படுத்தப் பெறாதனவும் தூய்மையானதுவுமான ஊற்றாக இருப்பது. மூன்று வரிகளில் முழுக் கவிதையைத் தருகின்றார். சுருக்கமே சொல்திறனின் ஆன்மாவானால், இந்த உலகில் இதைவிடப் பெரிய சொல்திறன் இருந்ததில்லை. அவருடைய உவமைகளும் உருவகங்களும் காடுகளிலும் வயல்களிலும்,நாட்டுப்புறக் காட்சிகளிலும் இயற்கையான சூழ்நிலைகளிலுமிருந்தே எழுந்தவை. அவர் இயற்கைக் கவிஞர்; இயல்பான கவிஞரும் கூட


வேமனரின் சிந்தனையை வெறுப்பவர்களும்கூட அவருடைய கவிதையின் சொல்வளம் இணையற்றதென்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். அவர்கவிதை இழிவின்றி எளிமையாகவும், தெவிட்டுதலின்றி இனிமையாகவும் உள்ளது. அஃது எல்லாவிதக் கலையுயிர்ப்பண்பையும் பல்வகைப் பெருக்கத்தையும் கொண்ட பெருவழக்கானபேச்சின் தன்மையையுடையது; முதல் இயலில் குறிப்பிட்டது போல் அத்தகைய பேச்சில் அவர் தலைசிறந்த முதல்வராவார். சில இடங்கள் அவர் கவிதை தெளிவுக்குறைவுள்ளது என்பது உண்மையே; ஆனால் அவர் உயர்வான மறைமெய்ம்மை சார்ந்த அநுபவங்களைக்கூறும் போதுதான் இங்ஙனம் நேரிடுகின்றது. இயல்பாகவே மறை மெய்ம்மை சார்ந்த அநுபவங்கள் யாவும் தனிமுறை உரிமையுடையவை; அவற்றை ஒருவர் உணரலாம் அல்லது உணராது போகலாம். அவற்றை உணர்பவர்கட்கு அவை உண்மையானவையாதலின் அவற்றின் விளக்கவுரை தேவை

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/63&oldid=1250791" இலிருந்து மீள்விக்கப்பட்டது