பக்கம்:வேமனர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாகவே முரட்டுத்தன்மை வாய்ந்த விலங்கு ஒன்று விரைந்து செயலாற்றிவிடும்." சார்லஸ் டிக்கென்ஸைப்பற்றி கூறப்படுவதுபோல் வேமனரின் நகைச்சுவை "ஓரளவு சமயப் பரப்பாளரின் நகைச்சுவையே"யாகும்; சிரிப்பினை எழுப்புவதில் மட்டிலும் அது முயலாமல் ஒரு தெளிவான நோக்கத்திற்கு உடந்தையாகவும் நின்று உதவுகின்றது.

வேமனர் மேலும் தனது ஆயுதச்சாலையில் சமமான அளவில் கேடு விளைவிக்கக்கூடிய எள்ளல், வஞ்சப்புகழ்ச்சி என்ற இரண்டு ஆயுதங்களைக் கொண்டிருந்தார். டாக்டர் ரெட்டி கூறுவதுபோல், வேமனர் மூடநம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளுங்கால் வாதம் புரிவதால் பயன் இல்லை; காரணம், மூடநம்பிக்கை பகுத்தறிவினால் திருந்தக்கூடியதன்று என்ற வால்டயர் கூறிய பெருமிதமான முதுமொழியில்" முழுநம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே வால்டயரைப் போலவே "வேமனரும் வாதம்புரிவதில்லை. ஆனால் மிகத் தீவிரமாகத் தாக்கிச் சாக செய்யக்கூடிய காயத்தை உண்டாக்கி இழிவான மேன்மைக்கு உரிமை கொண்டாடும் போலிக் கொள்கைகளை ஏளனத்திற்கு இடமாக்குகின்றார். வேமனரின் எள்ளலுக்கும் வஞ்சப்புகழ்ச்சிக்கும் நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் தரலாம். உள்ளார்ந்த உயிர் நிலையைப் புறக்கணித்து சமயத்திற்குப் புறம்பான பகுதிகளைப் பின்பற்றுபவர்களை நோக்கி வேமனர் கூறுவது: அடிக்கடி நீராடலால் வீடுபேற்றினை அடைய முடியுமா? அப்படியானால் மீன்கள் யாவும் காப்பாற்றப்பெறுதல் வேண்டும். உடம்பெல்லாம் திருநீற்றைப் பூசிக்கொண்டு வீடு பேற்றினை அடையமுடியுமா? அப்படியானால் கழுதையும் சாம்பலில் புரள்கின்றது. சைவ உணவுக்கொள்கையினின்று சமயத்தை உண்டாக்கிக் கொண்டு உடல்பற்றிய நிறைவினை அடையக்கூடுமா? அப்படியானால், வெள்ளாடுகள் உங்களைவிட அதிக முன்னேற்றம் அடைகின்றன. ஒரு சூத்திரருடைய மகனும் கட்டாயம் சூத்திரராக இருக்க வேண்டுமானால் வசிட்டரை எங்ஙனம் அந்தணர்களில் சிறந்தவராகக் கருதமுடியும்? தேவலோகத்து ஆடலணங்காயினும் ஊர்வசி என்ற சூத்திரப் பெண்ணின் மகனல்லவா அவர்? மேலும் தீண்டத்தகாதார் வகுப்பைச் சார்ந்த பெண்ணின் கணவரும் தீண்டாதாராகவே நடத்தப்பட வேண்டுமானால், வசிட்டரைப்பற்றி நீங்கள் எங்ஙணம் பெருமிதங்கொள்ள முடியும்? அவருடைய துணைவி அருந்ததி தீண்டாதார் வகுப்பைச் சார்ந்த பெண்ணாயிற்றே? நீங்கள் வேதபலியை நிறைவேற்றுவதாக இருந்தாலும், அல்லது திருத்தலப் பயணமாக ஒரு திவ்விய தேசத்துக்குச் சென்றாலும் மயிர்வினைஞர் சிரைப்பதற்காகவும், புரோகிதர் உங்கள் ஆன்மாவைக் காப்பதற்காகவும் நீரைத் தெளிக்கின்றார்கள். புரோகிதரால் தெளிக்கப்பெற்ற நீர்

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/68&oldid=1250798" இலிருந்து மீள்விக்கப்பட்டது