பக்கம்:வேமனர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவருடைய தொகுத்த பொதுக் கருத்து மிகப் பெருமிதமுடையது, பேரழகுடையது, அனைத்தையும் அடக்கிய தன்மையுடையது. ஆகவே அவர்,

“எல்லோரும் நல்லுணவைப் பகிர்ந்துண்ணப் படைக்க;
எல்லோர்க்கும் ஒரேவண்ணத் தட்டினிலே படைக்க;
எல்லோரும் வேற்றுமையற் ருென்ருயுண் ணட்டும்;
இனிதுயர்த்திக் கரமதலால் அவர்க்காசி பகர்க.”

என்று ஆர்வத்துடன் வேண்டுகின்றார்.

கபீரைப்போலவே, வேமனரும் 'ஒருவனே தேவன்' என்ற கொள்கையை வலியுறுத்திக் கூறுவதில் மிக்க அழுத்தத்தைக் காட்டுகின்றார், "அல்லாவும் அவரே; இராமனும் அவரே" என்கின்றார் கபீர். "ஒவ்வொரு பொருளிலும் அல்லா நிறைந்து திகழ்கின்றார்; அவரே கடவுளாவார்" என்கின்றார் வேமனர். அவருக்குச் சிவனும் அல்லாவும் ஒருவரே யாவர். 'ஒருவனே தேவன்' என்ற கொள்கை சமயங்களின் ஒருமைப்பாட்டையும் உயிர்களின் ஒருமைப்பாட்டையும் குறிப்பாகப் புலப்படுத்துகின்றது; கபீரைப் போலவே, வேமனரும் இந்த உண்மைக்ளைச் சிறப்பாகவே வற்புறுத்துகின்றார். "உடல்கள் வேறுபட்டனவே; ஆனால் அவற்றிற்கு எழுச்சியூட்டும் உயிர் ஒன்றேயாகும். உணவுப்பொருள்கள் வேறுபட்டவை; ஆனல் பசி ஒன்றேயாகும். பசுக்கள் யாவும் வெவ்வேறு நிறத்தையுடையவையாயினும் அவற்றின் பால் வெண்மை நிறத்தையுடையது. அணிவகைகள் யாவும் வெவ்வெறு வடிவத்தைக் கொண்டவையாயினும் அவை செய்யப்பட்ட தங்கம் ஒன்றே. மொழிகள் வேறு பட்டவை; ஆனல் சிந்தனை ஒன்றே. இனங்களும் சமயங்களும் வேறுபட்டவை; ஆனல் பிறப்பு ஒன்றே. மலர்கள் வேறுபட்டவை; ஆனால் வழிபாடு ஒன்றே. மெய்விளக்கத்துறைகள் வேறுபட்டவை; ஆனல் தெய்வம் ஒன்றேயாகும்" என்று மொழிகின்றார் வேமனர். வேமனரின் ஒருமைப்பாட்டுக் கொள்கை மிக விரிந்தது; அஃது உயிருள்ள பொருள்களனைத்தையும்-ஏன் உயிரற்ற பொருள்களையும் கூட-அணைத்துக்கொள்ளுகின்றது.

மேலும் வேமனர் உருவ வழிபாட்டைக் கண்டிப்பதில் கபீருடன் ஒன்றுபடுகின்றார். "கற்களை வழிபட்டு ஒருவர் கடவுளைக் காணமுடியும் என்றால், நான் மலையையே வழிபடுவேன்" என்று கூறுகின்றார் கபீர். "கற்களுக்கு ஏன் பன்னிற ஆடைகளை உடுத்துகின்றீர்கள்? அவைகட்கு ஏன் கோயில்களில் இருப்பிடம் தருகின்றார்கள்? அவைகட்கு ஏன் உண்ணும் உணவையும் பருகும் நீரையும் அளிக்கின்றீர்கள்? நீங்கள் கொண்டிருக்கும் அனைத்தையும் வழங்குபவராகிய கடவுள் இவைகளை உங்களிடமிருந்து உரிமை

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/88&oldid=1282634" இலிருந்து மீள்விக்கப்பட்டது