பக்கம்:வேமனர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10. உயிருள்ள எருதினைப் பசியினால் வாட்டுவார்;
ஒப்பியொரு கைப்புல்லை* யற்புடன் நல்கிடார்:
உயிரற்ற இடபத்தை மகிழ்வுற் றிறைஞ்சுவார்;
உலகைஏ மாற்றுமிக் கொடியரைச் சாடுவோம்.
        [*அற்பு-அன்பு]

11. காயமாம் கோவில்வாழ் நேயனைச்* சேர்ந்திடீர்!
கற்கோவில் எய்துவீர்! அற்போடு படையலைத்
தூயநற் பண்புடன் நல்குவீர்! நல்குவீர்!
தொட்டதும் உண்டுகொல் அப்பெருந் தெய்வமே!
     [*சார்ந்திடீர்-சாரமாட்டீர்]

சாதி:

12. மண்ணகத் தெங்ஙணும் வாழ்கின்ற மானுடர்
மாசறு சடத்தொடே தோன்றினார்; யாவரும்
எண்ணிடில் சோதரர்; வேறுபா டுள்ளதா?
இறைவன்முன் யாவரும் சமமாவர் பேதமேன்?

13. சாதியோ, பசியைத் தணித்திடும் உண்டியோ,
      சனித்திடும் தானமோ, சிறப்பினை நல்கிடும்?
   பேதையிற் பேதையாய்ச் சாதிக்கு முதலிடம்
       பேணாது நல்கலேன்? நாணாத மாந்தரே.

14. எவன்விழிக் குலகத்து மேவிடும் மானிடர்
        இழிவுற்ற சூத்திரர் எனத்தெரிந் திடும்;அவன்
   புவியினில் மிகமிகத் தாழ்ந்தவன்; அவற்கப்
        பொல்லாத நரகந் திறந்தபடி உள்ளதே!

15. உற்றிடும் சாதியின் பூசலோர் மாயையே!
        உள்ளசா திக்கெலாம் மூலமொன் றல்லவோ?
   உற்றவர் தங்களைப் புகழ்வதற் கிகழ்வதற்
        குலகினில் யாவரே நிச்சயித் திடவலார்?

16. பறையனின் குருதியும் சதையும்நம் உடலெனப்
        பாங்குடன் பொலிவதைக் கண்டும்நீர் இகழ்வதேன்?
   நிறைவுறும் உலகத்தில் எங்கணும் மேவிடும்
        நின்மலப் பொருள்எந்தச் சாதிநீர் கூறுவீர்?

மரணம்:

17. செத்தவன் பொருளைச் சுமந்துகொண் டேகிடான்,
        சேமித்த நிதியிவண் தங்கிடும்; மீண்டவன்
   இத்தலத் திணில்வரின் பொய்த்தசெல் வத்தினை
        ஈட்டினா லேவரும்; *தேட்டத்தி னிழிவதே!

[*தேட்டம்-செல்வம்]

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/96&oldid=1257484" இலிருந்து மீள்விக்கப்பட்டது