பக்கம்:வேலின் வெற்றி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 7 குறுமுனியாகிய அகத்தியன், அத்திரி, கெளதமன், காசிபன் ஆகிய முனிவரது தவத்தின் வலிமையை நான் தொலைத்தேன். ஆயினும், கையிலே கனலும், நெற்றிக் கண்ணிலே நெருப்பும் உடைய ஈசன்மீது அம்பெய்யச் சென்றால், அடியேன் உய்யு மாறுண்டோ?” என்றான். இங்ங்னம் மறுத்துரைத்த மன்மதனை நோக்கி, "மாரனே! நீ சொல்லிய வெல்லாம் உண்மையே. ஆயினும், தம்மை அடைந்தவரது துன்பத்தைத் துடைக்கும் ஈசன் அருளால், இக் காரியம் உன்னால் முடியும். இது மற்றையோரால் ஆகாது. இதற்கு முதற் காரணம் நீயே! எல்லார் செயலும் ஈசன் செயலே. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. அவன் அருளின்றி எப்பொருளும் நில்லாது. உன் செயலும் அவன் செயலே. ஆதலால், இன்றே செல்க. அன்றியும், தாங்க முடியாத துன்பமுற்றோர், தமக்கு உதவி செய்யுமாறு இரந்து வேண்டினால், அதனைச் செய்யாது மறுத்து உயிர் வாழ்ந்திருத்தல் உயர்ந்தோர்க்குரிய தன்மை யாகுமோ? யாதேனும் ஓர் உதவியை யார்க்கேனும் தம்மால் இயன்றவரை அவர் கேளாமல் தாமே செய்தல் தலையாயவர் தன்மை, அவர் கேட்டபின் செய்தல் இடையாயவர் தன்மை கேட்டும் முன்னே மறுத்துப் பின்னே செய்தல் கடையாயவர் தன்மையாகும். நாம் அனைவரும் வலிமை சான்ற சூரபதுமனது கொடுமையால் துன்புற்று வருந்துகின்றோம். அத் துன்பம் நீங்கும் வண்ணம் ஈசனிடம் ஒரு புதல்வனைப் பெற விரும்பி, உன் அரிய உதவியை வேண்டினோம்" என்று பிரமதேவன் உரைத்தான். அவ் வுரையை மறுக்க முடியாமல், மன்மதன் கரும்பு வில்லேந்தி மனையாளாகிய ரதியோடு கயிலை மலைக்குச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/15&oldid=919720" இலிருந்து மீள்விக்கப்பட்டது