பக்கம்:வேலின் வெற்றி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 155 ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ்சோதி வடிவத்தைக் கருமேகம் போன்ற சூரனும் கண்டு வியப்புற்று நின்றான். அப்போது மெய்ஞ்ஞானியரும் அறிய வொண்ணாத முருகப் பெருமான் அவனுக்குச் சற்றே மெய்யுணர் வளித்தார். அந் நிலையில், "என்னே இஃதென்னே கோலமா மயிலிற் குலவிய வேலனைப் பாலன் என்றே இதுகாறும் எண்ணியிருந்தேன். இவன் பெருமையை அறிந்திலேனே! மாயவன் மலரவன் முதலிய தலைவர்க்கும், வானவர்க்கும். பிற உயிர்களுக்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தியன்றோ? விருப்பு வெறுப்பற்ற ப்ரம் பொருளாகிய இறைவனே முருகன் என்று என்னிடம் தூது வந்த வீரவாகு கூறினான். அன்று அச் சொல்லின் உண்மையை உணர்ந் தேனில்லை; இவனே இறைவன் என்று இன்று அறிந்தேன். ஆயிரங் கோடி காமதேவருடைய அழகெல்லாம் திரண்டு ஒன் றாகி வந்தாலும் அறுமுகப் பெருமானது திருவடிவிற்கு இணை யாகாது என்றால், இவரது எல்லையற்ற அழகிற்கு உவமை கூற வல்லார் யார்? என் அகந்தை அகன்றது; மெய்யறிவு மனத்திற் புகுந்தது. வலத் தோளும் கண்ணும் துடித்தன; ുഖങ്ങള് களெல்லாம் புலனாகின்றன. தேவதேவனது திருவுருவம் காணப் பெற்றேன். இஃது என் தவப்பயன் அன்றோ? என் கால்கள் இவரைச் சுற்றி வலம் வரவேண்டும்; கைகள் குவிந்து தொழவேண்டும்; தலை தாழ்ந்து வணங்கவேண்டும்; வாய் வழுத்த வேண்டும்: தீமை யெல்லாம் ஒழிந்து நான் அடிமையாக வாழ வேண்டும். இவ்வாறு செய்ய மனம் முந்துகின்றது; ஆனால் மானம் என்னும் ஒன்றுதான் தடுக்கின்றது. தேவரை நான் சிறை செய்தது தவறு என்று சொன்னார் பலர்; எனினும், அச் செய்கையாலன்றோ மறை களும் பிரமனும் மற்றுமுள்ள வானவரும் காணுதற்கரிய இறைவன் இங்கு வரப்பெற்றேன்? நான் செய்த செயல் நன்றாயிற்று" என்று பலவாறாகப் போற்றிப் புகழ்ந்து நின்றான், சூரன். அந் நிலையில் முருகவேள் தமது பெரு வடிவத்தை நீத்தார்; முன்போல் மயில்மீது ஏறிவந்தார்; சூரனுக்கு அளித்த மெய்யறிவையும் மாற்றினார்; அவனை முன்னிருந்த வண்ணம் ஆக்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/163&oldid=919749" இலிருந்து மீள்விக்கப்பட்டது