பக்கம்:வேலின் வெற்றி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வேலின் வெற்றி சமைத்த உணவையும் கறிவகைகளையும் அன்பிலனாகிய வில்வலன் படைத்தான். அவற்றைப் பசி தீரும் அளவாக இனிது அருந்தினார் முனிவர்; பின்பு அசுரன் தமது கரத்திற் கொடுத்த வாசநீரைப் பருகி எழுந்து பொடியினாற் கைகளைத் தேய்த்துத் தண்ணிராற் கழுவி அமர்ந்தார். அப்போது வில்வலன், பிரமதேவன் அளித்த வரத்தை மனத்தில் நினைத்து, விருந்தினராகிய அருந்தவ முனிவரைக் கொல்லும் வண்ணம், "வாதாவி! மைந்தா இளையோய்! விரைந்து வா வா!" என்று அழைத்தான். - அந் நிலையில் முனிவரது வயிற்றிலே கறியாகக் கிடந்த வாதாவி, ஆடாக உருப்பெற்று எழுந்து பேசத் தொடங்கினான்; "அண்ணா, வில்வலா அன்று கடலைப் பருகிய கொடியோன் இன்று எண்ணிப் பாராது என் உடலையும் உண்டான், இவன் வயிற்றைக் கிழித்து வருகிறேன்” என்று ஆட்டுத்தம்பி அரிமான் போல் முழங்கினான். மாநிலம் புகழும் முனிவர், தீயோர் செய்த மாயம் தெரிந்து கடுஞ் சீற்றமுற்றார். "ஊன் கொண்ட கறியாகி, உட்சென்ற வாதாவி அப்படியே உயிர் நீத்து ஒழிக" என்று தம் வயிற்றை ஒருமுறை தடவினார், முனிவர். காட்டுத்தீயில் அகப் பட்ட சிறு செடிபோல், அவர் சாபத் தீயால் வாதாவி இறந் தொழிந்தான். கருமேகம்போல் எதிரே நின்ற வில்வலன், தம்பி இறந்ததை யறிந்து புகைந்து எழுந்தான், புனைந்திருந்த சிவக்கோலத்தை விட்டு பழைய அசுர வடிவம் கொண்டான், கழியொன்றைக் கையில் எடுத்து முனிவரை அடித்துக் கொல்லக் கருதி வந்தான். அப்பொழுது அவர் அங்கிருந்த புல் ஒன்றை எடுத்தார்; அதனைச் சிவப்படையாகக் கருதி விடுத்தார்; அப்படையின் வேகத்திற்கு ஆற்றாது, வில்வலன் விழுந்து மடிந்தான். அப்பொழுதே கொடிய வஞ்சகரது இடத்தை விட்டு அகன்றார், அகத்தியர், அன்னாரைக் கொன்ற பாவம் தீர்ந்தொழியும் வண்ணம் பரமசிவன் திருவடியில் ஆர்வத்தோடு அர்ச்சனை புரிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/86&oldid=919936" இலிருந்து மீள்விக்கப்பட்டது