பக்கம்:வைணமும் தமிழும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

101


(விஷ்வக்சேனர்) எழுந்தருளி ஒருவரும் அறியா வண்ணம் திருவிலச்சினை சாதித்துச் சென்றார் என்பது வைணவர்களின் நம்பிக்கை. காவிரியின் தென் கரையிலிருந்து கொண்டே திருவரங்கப்பெருமான்மீது யாழில் வைத்துப்பாடிச் சேவித்து வந்த இவரை எம்பெருமான் தன் கனவில் கட்டளையிட்டவாறு திருவரங்கப்பெருமானின் அர்ச்சகர் உலகசாரங்க முனிவர் பாண்பெருமாளைத் தம் முதுகில் சுமந்து சென்று அரங்கநகர் அப்பன் முன்னர் இறக்கி விட்டார்.[1] ஆழ்வாரும் அணியரங்கனது திருமேனியைப் பாதாதிகேசமாகச் சேவித்து அதில் ஆழ்ந்து அதன் அழகை அதுபவித்தார். அந்த அநுபவம் பின்புள்ளாருக்கும் தெளிவாகும் பொருட்டுப் பத்துப் பாசுரங்களாக அருளினார். இறுதியாக,

அண்டர்கோன்அணி
அரங்கன்என் அமுதினைக்
கண்ட கண்கள்மற்(று)
ஒன்றினைக் கானாவே.[2]

என்று தம் துணிவினை வெளியிட்டு மிகவும் உவப்புடன் நின்றார். எம்பெருமான் அவரை அங்கீகரிக்க அவரும் அனைவரும் காண அப்பிரானது திருவடிகளில் கலந்து மறைந்து இரும்புண்ட நீராயினார்.[3]{


  1. இதனால் இந்த ஆழ்வாருக்கு முனிவாகனர் என்ற மற்றொரு திருநாமமும் ஏற்பட்டது.
  2. அமலனாதி.-40
  3. திரு நீலகண்டயாழ்ப்பாணர் என்ற சிவனடியார். திருவாலவாய், திருவாரூர்த் திருக்கோயில்களின் வாயில்களில் நின்று பாட, அவரைச் சிவபிரான் தம் திருமுன்பு அழைத்துக் கொண்டார் என்ற பெரிய புராணத்தில் வரும் செய்தி இப்பாண்பெருமாள் வரலாற்றுடன் ஒப்பிடற்பாலது.