பக்கம்:வைணமும் தமிழும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவ்யப் பிரபந்த இலக்கியப் பெருவிழா

117


தொடங்கும் திருமொழி தொடங்கி 'மற்றறிருந்தீர்கட்கு' (12:1) என்று தொடங்கும் பதிகம் முடிய 164 பாசுரங்களைச் சேவிப்பார். இவற்றிலுள்ள நிகழ்ச்சிகளை அநுபவித்து அநுபவிக்கச் செய்து 'சென்னி ஒங்கு தண்திருவேங்கடம்' (பெரியாழ், திரு5,4;1)என்ற பாசுரத்திற்கு அபிநயமும் வியாக்கியானமும் நிறைவு பெற்றதும் அத்திருமொழியின் 2,3,4,5,6 பாசுரங்கள் 7ஆம் பாசுரத்தில்,

பருப்பதத்துக் கயல்பொறித்த
பாண்டியர் குலபதிபோல்
திருப்பொலிந்த சேவடிஎன்
சென்னியின்மேல் பொறித்தாய்

என்பது வரையில் அபிநயத்தோடு பாசுரங்களைச் சேவிப்பார். இங்கு நிறுத்திக்கொண்டு 'திருபொலிந்த சேவடி' ஆகிய பெருமாளுடைய சடகோபனைத் தமது திருமுடியில் ஏற்றிக் கொள்வார். அங்குள்ள ஆழ்வார், ஆச்சார்யர்கள் அனைவருக்கும் அரையர் தமது திருக்கையாலேயே 'சடகோபனை'ச் சாதிப்பார். குழுமியிருக்கும் அனைவருக்கும் சாதிப்பார். இங்ஙனம் சாதித்தபின் பெரியாழ்வார் திருமொழியில் எஞ்சிய 4 1/2 பாசுரங்களைச் சேவித்துப் பெரியாழ்வார் திருமொழியைத் தலைக்கட்டுவர்.

இதன்பின் திருப்பாவை தொடங்கப்பெறும். 'மார்கழித் திங்கள்’ எனத் தொடங்கும் முதற் பாசுரத்தை அபிநய வியாக்கியனங்களுடன் சேவிப்பார். இவ்வியாக்கியானத்தில் பல அரியக் கருத்துகள் மிளிரும். இக்கருத்துகள் அனைத்திற்கும் அபிநயம் காட்டும்போது குழுமியிருப்போர் கண்ணும், செவியும், மனமும் ஒடி அரையரிடம் அணையும்.