பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வ.உ.சி.

அன்றைய நிலைமைகளில் எளிதான செயலன்று. பொது மக்களை உறக்கத்திலிருந்து எழுப்பி, சுதந்திர முரசின் ஒலி கேட்டுப் போர் வெறி கொள்ளச் செய்து, போர்முனைக்குச் செலுத்தும் கடமையைப் பாரதி மேற்கொண்டார்.

விடுதலையுணர்வின் தொடக்கத்தைப் பாரதி கண்டார். மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தார்.

இத்தகைய உணர்வு நாட்டின் பல மொழிகள் பேசும் பகுதிகளிலும் தோன்றியது. அதனைப் பாரத நாட்டுக்கொடி வினைப்புகழ்தல் என்ற கவிதையில் வருணித்தார்.

நமது கொடி

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்—எங்கும்
   காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர்—தங்கள்
   நல்லுயிரீந்தும் கொடியினைக் காப்பார் (தாயின்)

அணியணி யாயவர் நிற்கும்—இந்த
   ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ!
பணிகள் பொருந்திய மார்பும்—விறல்
   பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர்! (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர்—கொடுந்
   தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர்—தாயின்
   சேவடிக் கேபணி செய்திடு துளுவர்

கன்னடர் ஒட்டிய ரோடு—போரில்
   காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொன்னகர்த் தேவர்க ளொப்ப—நிற்கும்
   பொற்புடை யாரிந்து ஸ்தானத்து மல்லர்

பூதல முற்றிடும் வரையும்—அறப்
   போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும்—பாரில்
   மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர்

பஞ்ச நதத்துப் பிறந்தோர்—முன்னைப்
   பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்
துஞ்சும் பொழுதினுந் தாயின்—பதத்
   தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும்

சேர்ந்ததைக் காப்பது காணீர்—அவர்
   சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!