பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வ.வே.சு.ஐயர்


அவர் அவ்வப்போது பம்பாய், பொது மக்கள் இடையே நடைபெறும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுவார். அவரது பேச்சுக்கள் பத்திரிக்கைகளிலே அடிக்கடி வெளிவரும். அதைப் பொதுமக்கள் மட்டும் படிக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியும்தான் கூர்ந்து படித்தது!

ஆட்சியின் இந்த வெறிநிலையை உணர்ந்த சாவர்கர், பம்பாயிலே சட்டம் படிப்பதை மறுத்து, லண்டன் சென்று பாரிஸ்டர் படிப்பு படிக்கலாம் என்று கருதினார். அதே நேரத்தில் லண்டன் மாநகரிலே உள்ள இந்திய இளைஞர்களிடமும் நாட்டுப் பற்றுணர்ச்சியை உருவாக்கி அவர்களையும் சுதந்திரப் புரட்சியிலே ஈடுபடுத்தினால், இந்தியாவை வெள்ளையரிடம் இருந்து விடுவிக்கலாம் என்ற முடிவுக்கு சாவர்கர் வந்தார்.

பாரிஸ்டர் படிக்க லண்டன் செல்ல முடிவெடுத்த சாவர்கருக்குப் போதிய பண உதவி இல்லை. அதனால், வழி என்ன என்று அவர் சிந்தனை செய்து கொண்டிருந்த போது, ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிலே, லண்டனிலே உள்ள ஒரு தொழிலதிபர். இந்தியாவிலே இருந்து லண்டன் வந்து பாரிஸ்டர் பட்டப் படிப்பு படிக்கும் இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கத் தயார், என்று விளம்பரம் செய்திருந்ததைப் பார்த்தார். உடனே விண்ணப்பம் செய்தார்.

இலண்டன் சென்ற சாவர்கர், அந்த நகரிலே இருந்த இந்தியா விடுதியிலே தங்கினார். பாரிஸ்டர் பட்டப் படிப்புக்காகச் சட்டக் கல்லூரியிலே சேர்ந்தார்; படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கே உள்ள இந்திய வாலிபர்கள் இடையே நட்புக் கொண்டார் தனது நாவன்மையின் பேச்சுத் திறத்தாலே அந்த இளைஞர்கள் இடையே இந்தியத் தேசப்பற்றை ஊட்டினார்! அவர்கள் அனைவரும் சாவர்கரின் நாட்டுணர்ச்சிக்குரிய சிந்தனையை ஏற்று அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு அவர் வழிப்படி நடக்க முற்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/42&oldid=1082607" இலிருந்து மீள்விக்கப்பட்டது