பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இலண்டனில் தீபாவளி விழா! காந்தியடிகள் சமையல்காரர்!

ங்கிலாந்து நாட்டிலே இருந்த இந்தியர்கள், சாவர்கர் எழுதிய கட்டுரைகளைப் படித்து இந்திய நாட்டின் சுதந்திரப் பற்றிலே புதியதோர் புத்துணர்ச்சியைப் பெற்றார்கள். ஆனால், சுதந்திரத்தின் விரோதிகளான இங்கிலீகாரர்கள் இந்திய இளைஞர்கள் மீது எரிச்சலும், பகையும் கொண்டார்கள்.

இதனால், மாவீரர் சாவர்கர் எழுதிய நூல்கள் சில பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. ஏன் தடை செய்தீர்கள் என்று இந்தியர்கள் அரசினரைக் கேட்டபோது, ஆங்கில அரசுக்கு எதிராக எவ்விதச் சுதந்திரக் கருத்துக்களையும் எழுதக்கூடாது என்றார்கள். ஆனால், சாவர்கரும், ஐயரும், மற்ற இந்திய வாலிபர்களும், பிரிட்டிஷ் அரசை ஏமாற வைத்து விட்டு, தடை செய்யப்பட்ட நூல்களை உலக நாடுகளின் விற்பனைக்கு அனுப்பினார்கள்.

தடை செய்யப்பட்ட அந்த நூல்களைப் படித்த இந்தியர்கள் புதிய உணர்வு பெற்றார்கள். எப்படியும் இந்திய தேசத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.

சாவர்கரது நூல்கள், இங்கிலீஷ்காரர்களை இந்தியாவிலே இருந்து விரட்ட வேண்டும் என்ற உணர்ச்சிகளை மக்களிடம் பல்வேறு வகையில் தூண்டிவிட்டது என்றால், வ.வே.சு. ஐயர் அந்த மக்களது உணர்ச்சிகளையும் மீறி ஒருபடி மேலே சென்று, பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிசுக்குச் சென்று துப்பாக்கிகளை வாங்கி, இந்தியாவிலே இருந்த அபிநவபாரத் உறுப்பினர்களுக்கு ரகசியமாக அனுப்பி வைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/53&oldid=1082819" இலிருந்து மீள்விக்கப்பட்டது