பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வ.வே.சு.ஐயர்


 ரோம் நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு, பிறகு ஒரு முஸ்லீம் பெருமகனைப் போல வேடமணிந்து கொண்டு, மக்கா மாநகர் வந்தார். சில நாட்கள் அவர் முஸ்லீம் உடைகளோடு மக்கா நகரிலே அலைந்து திரிந்த பின்பு, அதே முஸல்மான் வேடத்தோடு கப்பல் ஏறி இந்தியாவிலே உள்ள பம்பாய் நகர் வந்தார்.

எந்த நாட்டின் சுதந்திரத்துக்காக வன்முறை வீரனாக ஒவ்வொரு நாட்டிலும் போராடி வந்தாரோ அந்த சுதந்திரப் போர் வீரப் பெருமகன், பம்பாய் வீதிகளிலே தனது சுய உருவத்தோடு, இந்தியக் குடிமகனாக நடமாட முடியாமல், தலைமறைவாகவே பல நாட்கள் திரிந்து கொண்டிருந்தார்! எபடிப்பட்ட ஒரு சோக வாழ்விது என்று எண்ணிப் பார்ப்போர் எவராக இருந்தாலும், அவர்கள் நிச்சயமாகக் கண்ணீர் சிந்தியே தீருவர்! ஆனால், லட்சியத் திருமகன் வ.வே.சு. ஐயர் இந்தக் கவலைகள் ஏதும் இல்லாமல் ஒரு விடுதலை வீரனாகவே விளங்கினார்.

பம்பாய் பெரு நகரிலும் அவர் ஓர் இஸ்லாமியப் பெருமகனாக வாழ முடியவில்லை. ஏனென்றால், எங்கே தனது வேடம் அடையாளம் காணப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அதனால், அவர் ஒரு முஸ்லீம் பக்கிரி வேடத்திலேயே இலங்கை நாட்டின் தலைநகரமான கொழும்பு மாநகருக்கு வந்தார். அங்கேயும் அவர் கழிப்பறைக்குப் போகும் போதும் கூட, முஸல்மான் வேடத்தோடுதான் செல்லவேண்டி இருந்தது. இந்த நிலைமை அவருக்குள்ளே ஒருவித வெறுப்பையும், விரக்தியையும் உருவாக்கியது. இதனால், அவருக்கு வன்முறை மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்தக் காரணத்தால் அவர் மனம் மெதுவாக- மெதுவாக மென்முறை என்ற ஊஞ்சலிலே ஆட ஆரம்பித்தது.

வ.வே.சு. ஐயரின் உள்ளத்திலே நீறுபூத்த நெருப்புப் போல சுதந்திர வன்முறை உணர்ச்சி கனன்று கொண்டிருந்ததே தவிர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/72&oldid=1083783" இலிருந்து மீள்விக்கப்பட்டது