பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வ.வே.சு.ஐயர்


வ.வே.சு.ஐயர், அந்த வன்முறைக் கோரக் கொடுமைகளிலே இருந்து விடுபட, அகிம்சா முறையை, காந்திய முறையைக் காலத்துக்கும், தனது அறிவு முதிர்ச்சிக்கும் ஏற்ப மாற்றிக் கொண்டவர், காலத்திற்கேற்ப மக்களின வளர்ச்சிக்குரிய மனித சமத்துவப் பண்பிலே மட்டும் தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதனாக சாதீயத்தின் காப்பாளராகக் காட்சியளித்தார். இதற்குரிய எடுத்துக்காட்டாக ஐயரின் சேரன்மாதேவி குருகுலம் இருந்ததைச் சற்று விவரமாகப் பார்ப்போம்.

இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும், மொழிவளங்களையும், பழக்க வழக்கங்களையும் இந்திய மக்கள் மறந்து வருகிறார்கள். அதற்கு நேர்விரோதமாக ஆங்கில மொழி மோகிகளாக மாறிவரும் பழக்கத்தை மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வ.வே.சு. ஐயர் விரும்பினார். இந்திய நாடு உலகத்திற்கு மிகச்சிறந்த தத்துவங்களையும், உயர்ந்த கருத்துக்களையும் வழங்கிய பெருமை நம்முடைய முன்னோர்களுக்கு உண்டு என்பதை மக்கள் உணர்ந்து மதிக்க வேண்டும்.

அயல் நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றிப் போலியான வாழ்க்கை வாழ்வதைக் கைவிட வேண்டும். நமது ஞானிகள், தத்துவவாதிகள் காட்டிய வழிகளைப் பின்பற்றிச் சுதந்திர வாழ்வு வாழவேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்வது தம்முடைய கடமை என்பது வ.வே.சு. ஐயரது கொள்கை. அதற்கு என்ன செய்யலாம் என்று தனது நண்பர்களுடன் கலந்து யோசித்தார்.

குருகுலமுறையில் நமது பிள்ளைகளுக்கு தேசியப்பண்பாட்டுக் கல்வியைக் கற்பிக்க வேண்டும். அப்போதுதான். அவர்கள் உண்மையான இந்தியர்களாக வாழமுடியும் என்று யோசனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/82&oldid=1083996" இலிருந்து மீள்விக்கப்பட்டது