பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

13


வழக்கங்களையும் அவரது நூலிலே விரிவாக விளக்கி எழுதியுள்ளார். எனவே, நுணுக்கமாகப் படிக்க வேண்டிய ஒரு வரலாற்று நூலாகவே அது அமைந்துள்ளது.

இந்திய வரலாற்றில் பாலைவனப் பகுதி மணல்களிலே வாழும் பொன் அகழும் எறும்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த எறும்பு குள்ள நரியை விடப் பெரியதாம், நம் நாட்டு எறும்புகள் மண்ணை வெளியே கொண்டுவந்து தள்ளுவதைப் போல, பொன் அகழும் எறும்புகளும் குவியல் குவியலாக மண்ணை வெளியே கொண்டு வந்து தள்ளுகின்றனவாம். அந்த மண்ணிலே உள்ள பொன்னை எடுக்க மக்கள் ஒட்டகச் சவாரியோடு போய் பொன்னை எடுத்து வருவார்களாம்!

இந்த அற்புத இந்திய வரலாற்றைத் தேடிக் கண்டுபிடித்து வரலாற்றுச் சம்பவமாக்கியவர் யார் தெரியுமா? வரலாற்று ஞானி ஹிராடெடஸ்.

இத்தகைய அரிய வரலாற்று மேதையான ஹிராடெடஸ், ஆசிய மைனர் Asia minor என்ற நாட்டின் தென்மேற்கே இருந்த காரியா எனும் நகரப் பகுதியைச் சேர்ந்த ஹரிகார்னனஸ் என்ற ஊரிலே கி.மு. 484 ஆம் ஆண்டில், லிக்சஸ் என்ற தந்தைக்கும், டிரேயா என்ற தாயாருக்கும் பிறந்தார்.

அவர் பிறந்த நேரத்தில் அந்தப் பகுதியிலேயும், ஊரிலேயும் வாழ்ந்த மக்கள் எப்படி வசித்தார்கள் என்பதையும் நாம் சற்று கவனித்தால் அவர் வாழ்ந்த காலக் கட்டத்தையும் நாம் அறிந்து கொண்டவர்களாவோம்.

அடர்ந்த மலைகளும், மலைக்குன்றுகளும் தொடர்ந்து சரிந்து கடற்கரைவரை பரவி, சில வளைகுடாக்களை ஏற்படுத்தியிருந்தன. அந்தக் கடற்கரைப் பகுதிகளிலே கிரேக்க நாட்டு மக்கள் குடியேறி இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களின் உட்பகுதியிலே காரியர் என்ற இனத்ததாரும் வாழ்ந்து வந்தார்கள்.