பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. அசுர பலமுள்ள பறவைகள்

மனிதர்களையும் மிருகங்களையும் ஆகாயத்திலே துாக்கிச் சென்று கொன்று தின்னக்கூடிய அசுர வலிமை பெற்ற ஏராளமான பறவைகளை வெருட்டி ஓட்ட வேண்டும் என்பது ஹெர்க்குலிஸ்க்கு இடப்பெற்ற ஆறாவது பணி. அந்தப் பறவைகள் ஆர்க்கேடியா நாட்டில் ஸ்டிம்பேலஸ் என்ற சதுப்பு நிலத்தில் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தன. அந்தச் சதுப்பு நிலத்தில் மனிதன் நடந்து செல்ல முடியாது. சேற்றில் கால்கள் பதிந்துவிடும். அதில் நீர் நிறையத் தேங்கியிருந்தால், ஓடத்திலாவது செல்ல முடியும். அதற்கும் வழியில்லை. அத்தகைய இடத்தில் ஸ்டிம்பேலஸ் என்ற ஓர் ஆறும் ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரைகளிலேயே அசுரப் பறவைகள் கூடுகள் கட்டி வாழ்ந்துகொண்டு பல்கிப் பெருகி வந்தன.


ஹெர்க்குலிஸ் அந்தப் பிரதேசத்தை அடைந்து, ஆற்றின் கரையில் நடந்து கொண்டே, ‘என்ன செய்யலாம்?’ என்று ஆலோசனை செய்தான். அவனைச் சுற்றி எங்கணும் மனித எலும்புகளும், ஆடு மாடுகளின் எலும்புகளும் சிதறிக் கிடந்தன. அசுரப் பறவைகள் சதைகளைத் தின்றுவிட்டு அந்த எலும்புகளை அங்கே விட்டிருக்கின்றன என்று அவன் எண்ணிக் கொண்டான். அங்கே நிண நாற்றம் சகிக்க முடியாமலிருந்தது. அந்த வேளையில் அதீனாதேவி அவன் முன்பு தோன்றி, பித்தளைத் தகடுகளால் செய்த பெரிய முறம் போன்ற இரு தகடுகளை அவனிடம் கொடுத்து, அவைகளை இடைவிடாமல் தட்டித் தாளம் போட்டுப் பார்க்கும்படி சொல்லிவிட்டு மறைந்தாள். அவன் அவ்வாறே அவைகளைத் தட்டிப் பேரோசை உண்டாக்கினான். புதிதாகப் பெரிய ஓசையைக் கேட்ட பறவைகள் திடீர் திடீரென்று மேலே கிளம்பி வானத்திலே பறக்கத் தொடங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/47&oldid=1074317" இலிருந்து மீள்விக்கப்பட்டது