நூலைப்பற்றி
முற்றிலும் அகவற்பாவால் அமைந்த எனது தந்தையாரின் இந்தச் ‘சுயசரிதம்’ பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப் பெற்றதாகும்.
இதன் முதற்பகுதி தந்தையவர்களுடன் நெருங்கிப் பழகியவரும் பிற்காலத்தில் “லோகோபகாரி” பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவருமான பரலி. சு. நெல்லயப்பர் வேண்டுகோளுக்கு இணங்கி எனது தந்தையார் கோவைச் சிறைக் கோட்டத்தில் ‘காருண்ய அரசாங்கத்தின் கௌரவ விருந்தினராக’ இருந்தபோது அவ்வப்போது துண்டுத் துணுக்குகளாக எழுதியனுப்பியதன் கோவையாகும். இது இன்றைக்கு சுமார் முப்பத்தாறு ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டது.
சுயசரிதத்தின் பிற்பகுதி எனது தந்தையார் சிறைக்கோட்டத்தினின்று வெளிவந்த பின்னர் முன்னர் “காந்தி” பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும், இப்பொழுது “தினசரி” பத்திரிகையின் ஆசிரியராகத் திகழ்பவருமான திரு. தெ. ச. சொக்கலிங்கம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டதாகும்.
தலைப்புகள் எல்லாம் என்னால் தற்போது கொடுக்கப்பட்டவை தான்.
எல்லோருக்கும் விளக்கக்கூடிய இனிய எளிய தெளிய தமிழ்ப் பாலில் அமைந்துள்ள இச்சரிதத்தை தமிழ்நாட்டார் விரும்பி ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
வ. உ. சி. சுப்பிரமணியம்,
“தினமணி” உதவி ஆசிரியர்.
சென்னை |