பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௮௭-ம் அதி.–படை வகை.

படைவகை நான்கெனப் பகருவர், அவைதாம். ௮௬௧
முன்னோர் வழிவரு மூலப் படையே; ௮௬௨
நாட்டுளார்க் கூட்டு நாட்டுப் படையே. ௮௬௩
காட்டுளார்க் கூட்டுங் காட்டுப் படையே; ௮௬௪
கொடைநட் பால்வருங் கூலிப் படையே; ௮௬௫
நான்கிலொவ் வொன்று நால்வகைப் படும்அவை; ௮௬௬
நிலமிசை யமர்செயும் வலமிகு படையே; ௮௬௭
நிலக்கீ ழமர்செயு நேரிலாப் படையே; ௮௬௮
நீர்மிசை யமர்செயு நீர்க்கலப் படையே; ௮௬௯
வானிற் றிரிதரும் விமானப் படையே. ௮௭0

௮௮-ம் அதி.–படைக்கலம்.

படைக்கலம் பகைசெறப் படைகை யெடுப்பன. ௮௭௧
படைக்கல மில்லெனிற் படையுமின் றாகும். ௮௭௨
படைக்கல மீட்டல் பயப்பொரு ளீட்டலே. ௮௭௩
பகைத்திற னெண்ணியே படைக்கல மியற்றுக. ௮௭௪
விசையெரி கூருரம் விடமிக வியற்றுக. ௮௭௫
வெடிப்பன தெறிப்பன விசைமிகல் வேண்டும். ௮௭௬
எறிவன விடுவன வெரிமிகல் வேண்டும். ௮௭௭
குத்துவ வெட்டுவ கூர்மிகல் வேண்டும். ௮௭௮
உடைப்பன வறுப்பன வுரமிகல் வேண்டும். ௮௭௯
படைகொலும் படைக்கலம் விடமிகல் வேண்டும். ௮௮0


46