பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலயப் பிரவேச உரிமை.

11

 

அவர்களுடைய ஸ்தாபனத்தில் நாம் நன்கு காணமுடியும். பொதுப் பணத்திலிருந்து நிர்வகிக்கப்படும் வேத பாடசாலைகளும், பிராமண விதவா விடுதிகளும், சர்வதேசாபிமான பிராமணனுடைய தயாள குணத்துக்குத் தக்க சான்றுகளாக இன்றுமிருந்துவருகின்றனவன்றோ?

ஆனால், தென்னிந்தியாவில் ஸ்மார்த்தமும், பிராமணீயமுங்கூட தலைகாட்டுவதற்கு நெடுங் காலத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட நமது பண்டைப் பொதுக்கோவில்களைப் பொறுத்தமட்டிலும் ஜஸ்டிஸ் முத்துசுவாமி ஐயரவர்களுடைய கூற்று ஒருபொழுதும் உண்மையாக இருக்கமுடியாது; அதை ஒருபொழுதும் அனுமதிக்கவும் முடியாது. அக்காலத்தில் நாடு முற்றும் புத்த, சமணக் கோவில்களும், மடங்களும் மலிந்து கிடந்தன; இம்மதங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டு ஆள் திரட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டுமன்றோ? இந்தக் கோவில்களை ஸ்தாபித்த அரசர்கள் தாமே நிமிஷத்திற்கு நிமிஷம் சைவத்திலிருந்து சமணத்திற்கும், சமணத்திலிருந்து பௌத்தத்திற்கும் தங்கள் இஷ்டம்போல் மதம் மாறிக் கொண்டிருந்தனர்; மதப் பொறுமையும், மதச் சுதந்திரமும் தாராளமாக நிலவி வந்தன. அக்காலத்தில் சாதி வித்தியாசம் தமிழ்நாட்டிலில்லை; அல்லது மெல்லமெல்ல தலைகாட்டத் தொடங்கிற்று என்று சொல்லலாம். ஆரியக் கடவுள்களுக்காகவன்றி, ராக்ஷஸர்கள், அசுரர்களென ஆரியர் மதித்த திராவிடத் தெய்வங்களுக்காகவே இந்தக் கோவில்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இந்தக் கோவில்களுக்குள் வேத சுலோகங்களைப் படிக்கக்கூடாது. கற்பக் கிரகத்துக்குள் பார்ப்பான் நுழைந்தால் நாட்டிற்கும், அரசனுக்கும் கேடு விளையுமென்று நம்பப்பட்ட காலம். இவையெல்லாவற்றையும்விட மிக முக்கியமான விஷயமென்னவென்றால், இந்தப் பொதுக்கோவில் வருமானமெல்லாம் பிராமணர் வயிற்றுக்குள் போகாமல் அரசன் பொக்கிஷத்தைச் சேர்ந்ததென்பதாகும். இத்தகைய காலத்தில் ஏற்பட்ட பொதுக்கோவில்கள் விஷயத்தில் கற்றறிந்த பிராமண நீதிபதியான ஜஸ்டிஸ் முத்துசுவாமி ஐயரவர்களின் கூற்றைப் பொருத்துவது மிகப் பெரிய அநீதியாகும் என்று நான் மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.