பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VI

 


அவர்கள் அழகாகவும் விரிவாகவும் எழுதியுள்ளார். அவற்றில் சில பாகம் சட்டப்பயிற்சி யில்லாத சாதாரண மனிதர்களுக்கு சற்று ருசியற்றதாய் தோன்றினாலும், அவற்றோடு கலந்து விளங்கும் அபே டூபாய்ஸ் முதலிய ஐரோப்பியர்களுடைய மேற்கோள்கள் வெகு ருசிகரமாக இருக்கும் என்பதிற் சந்தேகமே இல்லை.

கோவிலைப்பற்றியே கவலை கொள்ளாத நம் போன்ற சுய மரியாதைக் காரர்களுக்கு ஆசிரியர் எடுத்துக்கொண்ட பிரயாசை அவ்வளவும் வீண் என்று தோன்றினாலும் தோன்றலாம். ஆனால் இவ்வளவு ஆராய்ச்சியையும் படித்த எந்த அரசாங்க அதிகாரியும், அகங்காரப் பார்ப்பன வழக்கறிஞனும், எந்த ஜாதிக் கர்வக் காரனும், கோவில் நுழைவின் உரிமையைப் பற்றிக் கிஞ்சிற்றும் சந்தேகம் என்பதே கொள்ள மாட்டான். காந்திகள் பலர் இதற்காகப் பட்டினி கிடந்தனர்; பலர் சத்தியாக்கிரகம் செய்தனர்; பலர் வாதாடினர்; பலர் சட்ட சபைக்குச் சென்றனர்; ஒரு மசோதாவும் இப்பொழுது அங்கு இருக்கிறது. அதைப்பற்றி மக்களின் அபிப்பிராயத்தைத் தெரிய அரசாங்கம் பல சங்கங்களுக்கும் பிரமுகர்களுக்கும் வேண்டுகோள் அனுப்பியுள்ளது. இத்தறுவாயில் இத்தகைய ஓர் ஆராய்ச்சிக் களஞ்சியமும், தர்க்க விருந்தும் ஆன நூல் அவர்கள் கையில் கிடைக்குமேல் அறிவுள்ள மக்கள் அனைவரும் கோவில் நுழைவிற்குச் சாதகமாக அபிப்பிராயம் அளிப்பர் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஒவ்வொருவருமேயன்றி அரசாங்கத்தாரும் சட்டசபைகளின் அங்கத்தினர் ஒவ்வொருவரும், வழக்கறிஞர் ஒவ்வொரு வரும், சீர்திருத்தக்காரர் ஒவ்வொருவரும், இன்னும் கூறவேண்டுமானால் இந்தியர் ஒவ்வொருவரும் தோழர் சிதம்பரம் அவர்கள் இயற்றியுள்ள இந்த நூலைக் கட்டாயம் வாங்கிப் படிப்பதன்னியில் தம் கையிலும் வீட்டிலும் வைத்திருத்தல் மிகவும் அவசியம் என நம்புகிறோம். தற்காலம் நமது தேசம் முழுவதும் நடந்து வரும் கோவில் நுழைவுப் போரில் பலர் தம் பலம் முழுவதும் கொண்டு சண்டை செய்த போதிலும், நம் தோழர் சிதம்பரம் அவர்களது ஆயுதமே மிகவும் சக்தியுடையதும் வெற்றியளிப்பதும் ஆகும்.