பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

அஃது அறப்பால், பொருட்பால், இன்பப் பால் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அம்மூன்று பகுதிகளையுடைய காரணத்தால், அது முப்பால் எனப் பெயர் பெற்றது.


அம் முப்பால்களில் அறப்பால் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், வீட்டியல், ஊழியல் என்னும் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட் டுள்ளது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், அரணியல், பொருளியல், படையியல், நட்பியல், குடியியல் என்னும் ஏழு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இன்பப் பால் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று, இருபாற் கூற்று என்னும் மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இப் பதினைந்து இயல்களும் நூற்றுமுப்பது அதிகாரங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வோர் அதிகாரமும் பப்பத்துக் குறள் வெண்பாக்களைக் கொண்டுள்ளது.


திருக்குறட் சுவடிகளில் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களாகக் காணப்படும், 'கடவுள் வாழ்த்து’, 'வான் சிறப்பு’, 'நீத்தார் பெருமை’ என்னும் மூன்று அதிகாரப்பாக்களும் திருவள்ளுவரால் இயற்றப் பட்டவை யல்லவென்றும், அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற் காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற் காலமுமாகிய இடைக்காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை யென்றும் யான் கருதுகிறேன். அவ்வாறு யான் கருதுவதற் குரிய காரணங்களிற் சில :— 1) இம் மூன்று அதிகாரங்களிலும் காணப்படும் பாக்கள் நூலின்

2