பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

வரம்புரையாக: அச்சட்டமுன்வடிவு ஒரு பணச் சட்டமுன்வடிவாக இல்லாதிருப்பின், குடியரசுத்தலைவர், 200 ஆம் உறுப்பின் முதல் வரம்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியுரையுடன் அச்சட்டமுன்வடிவை மாநிலச் சட்டமன்றத்தின் அவைக்கு அல்லது, நேர்வுக்கேற்ப, அவைகளுக்குத் திருப்பியனுப்பும்படி ஆளுநருக்குப் பணிப்புரை பிறப்பிக்கலாம்; அவ்வாறு ஒரு சட்டமுன்வடிவு திருப்பியனுப்பப்பட்டிருக்கும்போது, அந்த அவை அல்லது அவைகள், அத்தகைய செய்தியுரையைப் பெற்ற தேதியிலிருந்து ஆறுமாதக் கால அளவிற்குள், அதற்கிணங்க அச்சட்டமுன்வடிவை மறுஆய்வு செய்தல் வேண்டும்; மேலும், அந்த அவையினால் அல்லது அவைகளினால் அச்சட்டமுன்வடிவு திருத்தத்துடனோ திருத்தமின்றியோ மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஓர்வுக்கென மறுபடியும் முன்னிடப்படுதல் வேண்டும்.

நிதி பற்றிய பொருட்பாடுகளுக்குற்ற நெறிமுறை

202. ஆண்டு நிதிநிலை அறிக்கை :

(1) ஆளுநர், ஒவ்வொரு நிதியாண்டைப் பொறுத்தும், அந்த ஆண்டிற்கான மாநில வரவு செலவினங்கள் மதிப்பீட்டு விவர அறிக்கை ஒன்றை மாநிலச் சட்டமன்ற அவையின் அல்லது அவைகளின் முன்பு வைக்குமாறு செய்தல் வேண்டும்; அது இந்தப் பகுதியில் “ஆண்டு நிதிநிலை அறிக்கை” எனக் குறிப்பிடப்படும்.

(2) ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அடங்கியுள்ள செலவின மதிப்பீடுகளில் -

(அ) இந்த அரசமைப்பில் மாநிலத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினம் என விவரிக்கப்பட்டுள்ள செலவினத்திற்குத் தேவைப்படும் பணத்தொகைகளைத் தனியாகவும்,
(ஆ) மாநிலத் திரள்நிதியத்திலிருந்து செலவுசெய்யக் கருதியுள்ள பிற செலவினத்திற்குத் தேவைப்படும் பணத்தொகைகளைத் தனியாகவும்
காட்டுதல் வேண்டும்; அத்துடன், வருவாய்க் கணக்குவகைச் செலவினத்தைப் பிறவகைச் செலவினத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலும் வேண்டும்.

(3) பின்வரும் செலவினங்கள் மாநிலத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினங்களாக இருத்தல் வேண்டும்-

(அ) ஆளுநரின் பதவியூதியங்கள், படித்தொகைகள் மற்றும் அவருடைய பதவி தொடர்பான பிற செலவினங்கள்;
(ஆ) சட்டமன்றப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தைப் பொறுத்தவரை, சட்டமன்ற மேலவைத்தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும்;
(இ) வட்டி, கடனடைப்பு நிதியச் செலவீடுகள், மீட்புச் செலவீடுகள் உள்ளடங்கலாக மாநிலத்தின்மீது பொறுப்படைவுள்ள உறுகடன் செலவீடுகள் மற்றும் பெறுகடன் எழுப்புதல், உறுகடன் அடைத்தல், மீட்டல் ஆகியவை தொடர்பான செலவினங்கள்;
(ஈ)உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வரையூதியங்கள், படித்தொகைகள் பொறுத்த செலவினங்கள்;
(உ) நீதிமன்றம் அல்லது பொதுவர் தீர்ப்பாயம் ஒன்றன் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது தீர்வம் எதன்படியும் செலுத்தித் தீர்ப்பதற்குத் தேவைப்படும் பணத்தொகைகள்;
(ஊ) இவ்வாறு சார்த்தப்பட வேண்டுமென இந்த அரசமைப்போ சட்டத்தினால் மாநிலச் சட்டமன்றமோ விளம்புகிற பிற செலவினங்கள்.

31-4-26a

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/102&oldid=1465450" இலிருந்து மீள்விக்கப்பட்டது