பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



76

(2) ஒரு சட்டமுன்வடிவு, அபராதங்களை அல்லது பிற தண்டங்களை விதிப்பதற்கு அல்லது உரிமங்களுக்கான கட்டணங்களையோ செய்யப்பட்ட பணிகளுக்கான கட்டணங்களையோ கோருவதற்கும் செலுத்துவதற்கும் அது வகைசெய்கிறது என்ற காரணத்தால் மட்டுமோ, உள்ளாட்சி அதிகார அமைப்பு அல்லது குழுமம் ஒன்று உள்ளாட்சி நோக்கங்களுக்காக வரி எதனையும் விதிப்பதற்கு, நீக்குவதற்கு, குறைப்பதற்கு, மாற்றுவதற்கு அல்லது ஒழுங்குறுத்துவதற்கு அது வகைசெய்கிறது என்ற காரணத்தாலோ அதை ஒரு பணச்சட்டமுன்வடிவு எனக் கொள்ளுதல் ஆகாது.

(3) சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு சட்டமுன்வடிவு, பணச் சட்டமுன்வடிவா இல்லையா என்னும் பிரச்சினை ஒன்று எழுமாயின், அதன்மேல் சட்டமன்றப் பேரவைத் தலைவர் அளிக்கும் முடிபே அறுதியானது ஆகும்.

(4) ஒவ்வொரு பணச் சட்டமுன்வடிவும் 198 ஆம் உறுப்பின்படி சட்டமன்ற மேலவைக்கு அனுப்பப்படும்போதும், 200ஆம் உறுப்பின்படி ஏற்பிசைவுக்காக ஆளுநரிடம் முன்னிடப்படும்போதும், அது ஒரு பணச் சட்டமுன்வடிவு எனச் சட்டமன்றப் பேரவைத்தலைவர் கையொப்பமிட்ட உறுதியுரை ஒன்று மேற்குறிப்பாக அதன்மீது எழுதப்படுதல் வேண்டும்.

200.சட்டமுன்வடிவுகளுக்கு ஏற்பிசைவு:

ஒரு சட்டமுன்வடிவு, ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றப்பட்டதன்மேல் அல்லது சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தில் அந்த மாநிலச் சட்டமன்ற ஈரவைகளினாலும் நிறைவேற்றப்பட்டதன்மேல், அது ஆளுநரிடம் முன்னிடப்படுதல் வேண்டும்; ஆளுநர், தாம் அச்சட்டமுன்வடிவுக்கு ஏற்பிசைவு அளிப்பதாகவோ அதற்கு ஏற்பிசைவு அளிக்க மறுப்பதாகவோ அச்சட்டமுன்வடிவைக் குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக நிறுத்திவைப்பதாகவோ விளம்புவார்:

வரம்புரையாக: ஆளுநர், தம்மிடம் ஏற்பிசைவுக்காக ஒரு சட்டமுன்வடிவு முன்னிடப்பட்ட 4. இயன்றளவு விரைவில், அது ஒரு பணச்சட்டமுன்வடிவாக இல்லாதிருப்பின், அச்சட்டமுன்வடிவையோ அதில் குறித்துரைக்கப்பட்ட வகையங்கள் எவற்றையுமோ அந்த அவை அல்லது அவைகள் மறுஆய்வு செய்யுமாறும், குறிப்பாக, தாம் பரிந்துரைக்கும் திருத்தங்கள் எவற்றையும் அறிமுகப்படுத்துவது விரும்பத்தகுந்ததா என்பதைப்பற்றிக் கருதுமாறும் கேட்டுக்கொள்கின்ற செய்தியுரையுடன் அச்சட்டமுன்வடிவை அந்த அவைக்கு அல்லது அவைகளுக்குத் திருப்பியனுப்பலாம்; அவ்வாறு ஒரு சட்ட முன்வடிவு திருப்பியனுப்பப்பட்டிருக்கும்போது, அந்த அவை அல்லது அவைகள் அதன்படியே அச்சட்டமுன்வடிவை மறுஆய்வு செய்தல் வேண்டும்; மேலும், அந்த அவையினால் அல்லது அவைகளினால் அச்சட்டமுன்வடிவு திருத்தத்துடனோ திருத்தமின்றியோ மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு ஏற்பிசைவளிக்க மறுத்தல் ஆகாது:

மேலும் வரம்புரையாக: சட்டமுன்வடிவு எதுவும் சட்டமாகிவிட்டால், உயர் நீதிமன்றத்திற்கு அமைந்திருக்க வேண்டும் என்று இந்த அரசமைப்பில் வரைந்தமைக்கப்பட்ட தகுநிலைக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் அந்த நீதிமன்றத்தின் அதிகாரங்களை அது திறக்குறைவு செய்யும் என ஆளுநர் கருதுவாராயின், அச்சட்டமுன்வடிவு எதற்கும் ஆளுநர் ஏற்பிசைவு அளித்தல் ஆகாது; அதனைக் குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக நிறுத்திவைத்தல் வேண்டும்.

201. ஓர்வுக்கென நிறுத்திவைக்கப்படும் சட்டமுன்வடிவுகள்:

ஒரு சட்டமுன்வடிவு குடியரசுத்தலைவரின் ஓர்வுக்கென ஆளுநர் ஒருவரால் நிறுத்திவைக்கப்படும்போது, குடியரசுத்தலைவர், தாம் அச்சட்டமுன்வடிவுக்கு ஏற்பிசைவு அளிப்பதாகவோ அதற்கு ஏற்பிசைவு அளிக்க மறுப்பதாகவோ விளம்புதல் வேண்டும்: 31-4-26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/101&oldid=1393361" இலிருந்து மீள்விக்கப்பட்டது