பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

198. பணச் சட்டமுன்வடிவுகள் பொறுத்த தனியுறு நெறிமுறை :

(1) பணச் சட்டமுன்வடிவு எதனையும் சட்டமன்ற மேலவையில் அறிமுகப்படுத்துதல் ஆகாது.

(2) பணச் சட்டமுன்வடிவு எதுவும் சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பின்பு, சட்டமன்ற மேலவைக்கு அதன் பரிந்துரைகளுக்காக அனுப்பப்படுதல் வேண்டும்; சட்டமன்ற மேலவை, அந்தச் சட்டமுன்வடிவைப் பெற்ற தேதியிலிருந்து பதினான்கு நாள் காலஅளவிற்குள் அந்தச் சட்டமுன்வடிவைச் சட்டமன்றப் பேரவைக்குத் தன் பரிந்துரைகளுடன் திருப்பியனுப்புதல் வேண்டும்; அதன்மேல், சட்டமன்றப் பேரவை, சட்டமன்ற மேலவையினால் செய்யப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்கமறுக்கலாம்.

(3) சட்டமன்ற மேலவையின் பரிந்துரைகளில் எதனையும் சட்டமன்றப் பேரவை ஏற்றுக்கொள்ளுமாயின், சட்டமன்ற மேலவையினால் பரிந்துரை செய்யப்பட்டுச் சட்டமன்றப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் அந்தப் பணச் சட்டமுன்வடிவு ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படும்.

(4) சட்டமன்ற மேலவையின் பரிந்துரைகளில் எதனையும் சட்டமன்றப் பேரவை ஏற்றுக்கொள்ளாவிடின், அந்தப் பணச் சட்டமுன்வடிவு சட்டமன்ற மேலவை பரிந்துரை செய்த திருத்தங்களில் எதுவுமின்றி, சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட வடிவத்திலேயே ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படும்.

(5) சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றப்பட்டு, சட்டமன்ற மேலவைக்கு அதன் பரிந்துரைகளுக்காக அனுப்பப்பட்ட ஒரு பணச்சட்டமுன்வடிவு, மேற்சொன்ன பதினான்கு நாள் காலஅளவிற்குள் சட்டமன்றப் பேரவைக்குத் திருப்பியனுப்பப்படாவிடின், அந்தக் காலஅளவு கழிவுற்றதும் அச்சட்டமுன்வடிவு சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட வடிவத்திலேயே ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படும்.

199. "பணச் சட்டமுன்வடிவுகள்" என்பதன் பொருள்வரையறை :

(1) இந்த அத்தியாயத்தைப் பொறுத்தவரை, ஒரு சட்டமுன்வடிவு பின்வரும் பொருட்பாடுகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையம் பற்றிய வகையங்களை மட்டுமே கொண்டிருப்பதாயின், அது ஒரு பணச் சட்டமுன்வடிவு எனக் கொள்ளப்படும்:

(அ) வரி எதனையும் விதித்தல், நீக்குதல், குறைத்தல், மாற்றுதல் அல்லது ஒழுங்குறுத்தல்;
(ஆ) மாநில அரசால் பணம் கடன் வாங்கப்படுவதை அல்லது பொறுப்புறுதி எதுவும் அளிக்கப்படுவதை ஒழுங்குறுத்துதல் அல்லது மாநில அரசு பொறுப்பேற்றுள்ள அல்லது பொறுப்பேற்கவுள்ள நிதி பற்றிய கடமைப்பாடுகள் எவற்றையும் பொறுத்த சட்டத்தை திருத்தம் செய்தல்;
(இ)மாநிலத் திரள்நிதியத்தை அல்லது எதிரதாக்காப்பு நிதியத்தைக் கையடைவு கொள்ளல், அத்தகைய நிதியம் எதிலும் பணம் செலுத்துதல் அல்லது அதிலிருந்து பணம் எடுத்தல்;
(ஈ)மாநிலத் திரள்நிதியத்தினின்றும் பணம் ஒதுக்கீடு செய்தல்;
(உ)செலவினம் எதனையும் மாநிலத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினம் என விளம்புதல் அல்லது அத்தகைய செலவினத்தொகை எதனையும் கூடுதலாக்குதல்;
(ஊ)மாநிலத் திரள்நிதியத்தின் அல்லது மாநில அரசுப் பொதுக்கணக்கின் பொருட்டுப் பணம் பெறுதல் அல்லது அத்தகைய பணத்தைக் கையடவு கொள்ளல் அல்லது வழங்குதல்; அல்லது
(அ) முதல் (ஊ) வரையுள்ள உட்கூறுகளில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளில் (எ)எதனையும் சார்ந்த பொருட்பாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/100&oldid=1465029" இலிருந்து மீள்விக்கப்பட்டது