பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


சட்டமியற்றுவதற்கான நெறிமுறை

196. சட்டமுன்வடிவுகளை அறிமுகம் செய்தலும் நிறைவேற்றுதலும் பற்றிய வகையங்கள்:

(1) பணச் சட்டமுன்வடிவுகள், பிற நிதிச் சட்டமுன்வடிவுகள் இவற்றைப் பொறுத்த 198, 207 ஆகிய உறுப்புகளின் வகையங்களுக்கு உட்பட்டு, சட்டமுன்வடிவு எதுவும், சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தின் சட்டமன்ற ஈரவைகளில் எதிலும் முதலில் கொண்டுவரப்படலாம்.

(2), 197, 198 ஆகிய உறுப்புகளின் வகையங்களுக்கு உட்பட்டு, சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தின் சட்டமன்ற ஈரவைகளிலும் திருத்தம் ஏதும் இல்லாமல் அல்லது அந்த ஈரவைகளும் ஏற்றுக்கொண்ட திருத்தங்களை மட்டும் கொண்டு, ஒரு சட்டமுன்வடிவை ஈரவைகளும் ஏற்றுக் கொண்டிருந்தாலன்றி, அது அந்த ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

(3) ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் ஓர்விலுள்ள ஒரு சட்டமுன்வடிவு, அச்சட்டமன்ற அவையின் அல்லது அவைகளின் கூட்டத்தொடர் இறுதிசெய்யப்படுவதன் காரணத்தால் அற்றுப் போவதில்லை.

(4) சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்படாத நிலையில், சட்டமன்ற மேலவையின் ஓர்விலுள்ள ஒரு சட்டமுன்வடிவு, பேரவை கலைக்கப்படுமாயினும் அற்றுப்போவதில்லை. (5) ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவையில் ஓர்விலுள்ள அல்லது சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றபட்டிருந்து சட்டமன்ற மேலவையின் ஓர்விலுள்ள ஒரு சட்டமுன்வடிவு, அப்பேரவை கலைக்கப்படுவதன்மேல் அற்றுப்போகும்.

197. பணச் சட்டமுன்வடிவுகள் அல்லாத பிற சட்டமுன்வடிவுகள் குறித்துச் சட்டமன்ற மேலவையின் அதிகாரங்கள்மீது வரையறை :

(1) ஒரு சட்டமுன்வடிவு, சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்டிருந்து அச்சட்டமன்ற மேலவைக்கு அனுப்பப்பட்ட பின்பு—

(அ)அச்சட்டமுன்வடிவு அந்த மேலவையால் மறுக்கப்படுமாயின், அல்லது
(ஆ)அந்த மேலவையின்முன் அச்சட்டமுன்வடிவு வைக்கப்பட்ட தேதியிலிருந்து, அச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படாமலேயே மூன்று மாதங்களுக்குமேல் கழிந்திருக்குமாயின், அல்லது
(இ)சட்டமன்றப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்படாத திருத்தங்களுடன் அச்சட்டமுன்வடிவு அந்த மேலவையால் நிறைவேற்றப்படுமாயின்,

அந்தச் சட்டமன்றப் பேரவை, அதன் நெறிமுறையை ஒழுங்குறுத்தும்விதிகளுக்கு உட்பட்டு, அதே கூட்டத்தொடரில் அல்லது பிந்திய கூட்டத்தொடர் எதிலும், சட்டமன்ற மேலவை செய்துள்ள, குறிப்புரை செய்துள்ள அல்லது ஏற்றுக்கொண்டுள்ள திருத்தங்கள், எவையேனுமிருப்பின், அத்திருத்தங்களுடனோ அத்திருத்தங்களின்றியோ அச்சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி, அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவை சட்டமன்ற மேலவைக்கு அனுப்பலாம்.

(2) அவ்வாறு ஒரு சட்டமுன்வடிவு, சட்டமன்றப் பேரவையால் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்டு, சட்டமன்ற மேலவைக்கு அனுப்பப்பட்ட பின்பு-

(அ)அச்சட்டமுன்வடிவு அந்த மேலவையால் மறுக்கப்படுமாயின், அல்லது
(ஆ)அந்த மேலவையில் அச்சட்டமுன்வடிவு வைக்கப்பெற்ற தேதியிலிருந்து, அச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படாமலேயே ஒரு மாதத்திற்கு மேல் கழிந்திருக்குமாயின், அல்லது
(இ)சட்டமன்றப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்படாத திருத்தங்களுடன் அச்சட்டமுன்வடிவு அந்த மேலவையால் நிறைவேற்றப்படுமாயின்

அச்சட்டமுன்வடிவு, சட்டமன்ற மேலவை செய்துள்ள அல்லது குறிப்புரை செய்துள்ள திருத்தங்களில் சட்டமன்றப் பேரவை ஏற்றுக்கொள்ளும் திருத்தங்கள், எவையேனுமிருப்பின், அவற்றுடன், இரண்டாம் முறையாகச் சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட வடிவத்தில் மாநிலச் சட்டமன்ற அவைகளால் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படும்.

(3) இந்த உறுப்பிலுள்ள எதுவும் பணச் சட்டமுன்வடிவுக்குப் பொருந்துறுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/99&oldid=1466223" இலிருந்து மீள்விக்கப்பட்டது