பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


193. 188ஆம் உறுப்பின்படி ஆணைமொழி அல்லது உறுதிமொழி ஏற்பதற்குமுன்போ தகுதியற்றவராக அல்லது தகுதிக்கேடுற்றவராக இருக்கும்போதோ அவையில் அமர்ந்தாலும் வாக்களித்தாலும் அதற்குற்ற தண்டம் :

ஒருவர், 188ஆம் உறுப்பின் வேண்டுறுத்தங்களுக்கேற்ப நடப்பதற்கு முன்பு அல்லது ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவையின் அல்லது சட்டமன்ற மேலவையின் உறுப்பினர் பதவிக்குத் தாம் தகுதியற்றவராகவோ தகுதிக்கேடுற்றவராகவோ நாடாளுமன்றத்தால் அல்லது மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றன் வகையங்களால் தாம் தடைசெய்யப் பட்டிருப்பதாகவோ இருப்பதை அறிந்திருந்தும், அவர் அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையில் அல்லது சட்டமன்ற மேலவையில் உறுப்பினராக அமர்வாராயின் அல்லது வாக்களிப்பாராயின், அவர் அவ்வாறு அமரும் அல்லது வாக்களிக்கும் நாள் ஒவ்வொன்றையும் பொறுத்து, ஐந்நூறு ரூபாய் தண்டத்திற்கு உள்ளாவார்; அது மாநிலத்திற்குரிய கடன் என வசூல் செய்யப்படும்.

மாநிலச் சட்டமன்றங்களுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் மற்றும் காப்புரிமைகள்

194. சட்டமன்ற அவைகளுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் முதலியன :

(1) இந்த அரசமைப்பின் வகையங்களுக்கும் சட்டமன்ற நெறிமுறையினை ஒழுங்குறுத்துகின்ற விதிகள், நிலையாணைகள் ஆகியவற்றிற்கும் உட்பட்டு, ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றத்திலும் பேச்சுச் சுதந்திரம் இருத்தல் வேண்டும்.

(2) ஒரு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் எவரும், சட்டமன்றத்தில் அல்லது அதன் குழு எதிலும் அவர் கூறிய எதனைப் பொறுத்தும் அல்லது அளித்த வாக்கு எதனைப் பொறுத்தும் நீதிமன்ற நடவடிக்கை எதற்கும் உள்ளாகமாட்டார்; அவ்வாறே, எவரும் அத்தகைய சட்டமன்ற அவை ஒன்றால் அல்லது அதன் அதிகாரத்தின்கீழ் அறிக்கை, வரையேடு, வாக்களிப்புகள் அல்லது நடவடிக்கைகள் பற்றிச் செய்யப்படும் வெளியீடு பொறுத்தும் அத்தகைய நடவடிக்கைக்கு உள்ளாகமாட்டார்.

(3) பிறவகைகளில், ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் ஓர் அவைக்கும், அத்தகைய சட்டமன்றத்தின் ஓர் அவையின் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள், காப்புரிமைகள் ஆகியவை, சட்டமன்றம் சட்டத்தினால் அவ்வப்போது வரையறை செய்கின்றவாறு இருக்கும்; அத்துடன், அவ்வாறு வரையறை செய்யப்படும்வரையில், 1978ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் 26ஆம் பிரிவு செல்லாற்றல் பெறுவதற்கு ஒட்டிமுன்பு அந்த அவைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும் இருந்தவாறே இருக்கும்.

(4). (1), (2), (3) ஆகிய கூறுகளின் வகையங்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பொருந்துறுவனபோன்றே, அச்சட்டமன்றத்தின் அவை ஒன்றில் அல்லது அதன் குழு ஒன்றில் பேசுவதற்கு மற்றும் பிறவாறு அதன் நடவடிக்கைகளில் பங்குகொள்வதற்கு இந்த அரசமைப்பின்படி உரிமை உடையவர்களுக்கும் பொருந்துறுவன ஆகும்.

195. உறுப்பினர்களின் வரையூதியங்களும் படித்தொகைகளும் :

ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவை, சட்டமன்ற மேலவை ஆகியவற்றின் உறுப்பினர்கள், அந்த மாநிலச் சட்டமன்றம் அவ்வப்போது சட்டத்தினால் தீர்மானிக்கும் வரையூதியங்களையும் படித்தொகைகளையும் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள் ஆவர்; அதன்பொருட்டு அவ்வாறு வகைசெய்யப்படும் வரையில், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, நேரிணையான மாகாணத்தின் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்குப் பொருந்துறுவனவாக இருந்த அதே வீதங்களிலும் அதே வரைக்கட்டுகளின்படியும், வரையூதியங்களும் படித்தொகைகளும் பெறுவதற்கு அவர்கள் உரிமைகொண்டவர்கள் ஆவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/98&oldid=1466222" இலிருந்து மீள்விக்கப்பட்டது