பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


(2) ஆண்டு நிதிநிலை அறிக்கை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள செலவினங்கள், ஒரு மானியத்திற்கான கோரிக்கை மற்றும் அந்தச் செலவினங்கள் அல்லது மானியத்திற்காக மாநிலத் திரள்நிதியத்தினின்றும் பண ஒதுக்களிப்பிற்கு அதிகாரம் வழங்கி இயற்றப்பட வேண்டிய சட்டம் இவற்றைப் பொறுத்து 202, 203, 204 ஆகிய உறுப்புகளின் வகையங்கள் எவ்வாறு செல்திறம் கொண்டனவோ, அவ்வாறே, இதில் கூறப்பட்டுள்ள அறிக்கை, செலவினங்கள், கோரிக்கை மற்றும் அச்செலவினங்கள் அல்லது அக்கோரிக்கை பற்றிய மானியத்திற்காக மாநிலத் திரள்நிதியத்தினின்றும் பண ஒதுக்களிப்பிற்கு அதிகாரம் வழங்கி இயற்றப்பட வேண்டிய சட்டம் இவற்றைப் பொறுத்தும் செல்திறம் கொண்டன ஆகும்.

206. முன்னளிப்பு மானியம், முன்பற்றுத்தொகை மானியம், குறித்ததனி மானியம் இவற்றின் மீதான வாக்களிப்பு :

(1) இந்த அத்தியாயத்தின் மேலேகண்ட வகையங்களில் எது எவ்வாறிருப்பினும், ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவை-

(அ)மானியத்தின்மீது வாக்களிப்பதற்கு 203ஆம் உறுப்பில் வகுத்துரைக்கப்பட்டுள்ள நெறிமுறை முடிவடையாமலும், மதிப்பீட்டுச் செலவினங்களுக்காக 204ஆம் உறுப்பின் வகையங்களின்படி சட்டம் நிறைவேற்றப்படாமலும் உள்ள நிலையில், நிதியாண்டின் ஒரு பகுதிக்குரிய அச்செலவினத்திற்கான மானியத்தை முன்னதாக அளிப்பதற்கும்,

(ஆ)பணியின் அளப்பருந்தன்மை அல்லது திட்டவட்டமற்ற தன்மை காரணமாக ஒரு கோரிக்கையைப்பற்றி ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழக்கமாகக் கொடுக்கப்படும் விவரங்களுடன் கூற இயலாதபோது, எதிர்பார்க்க முடியாத அக்கோரிக்கைக்காக மாநிலத்தின் வருவாய் ஆதாரங்களின் மீது மானியம் அளிப்பதற்கும்,
(இ)ஒரு நிதியாண்டின் நடப்புப் பணியின் ஒரு பகுதியாக அமையாத குறித்ததனி மானியம் ஒன்றை அளிப்பதற்கும்

அதிகாரம் உடையது ஆகும்: மேலும், மேற்சொன்ன மானியங்கள் பொருட்டு மாநிலத் திரள்நிதியத்திலிருந்து பணம் எடுப்பதற்கும் சட்டத்தினால் அதிகாரமளிக்க மாநிலச் சட்டமன்றம் அதிகாரம் உடையது ஆகும்.

(2) ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செலவினத்திற்கான மானியத்தை அளித்தல், அச்செலவினத்திற்காக மாநிலத் திரள்நிதியத்திலிருந்து பண ஒதுக்களிப்பதற்கு அதிகாரம் வழங்கி இயற்றப்படவேண்டிய சட்டம் இவற்றைப் பொறுத்து 203, 204 ஆகிய உறுப்புகளின் வகையங்கள் எவ்வாறு செல்திறம் கொண்டனவோ, அவ்வாறே, (1) ஆம் கூறின்படி மானியம் அளித்தல், அக்கூறின்படி இயற்றப்படவேண்டிய சட்டம் இவற்றைப் பொறுத்தும் செல்திறம் கொண்டன ஆகும்.

207. நிதிச் சட்டமுன்வடிவுகள் பற்றிய தனியுறு வகையங்கள் :

(1) 199ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின் (அ) முதல் (ஊ) வரையுள்ள உட்கூறுகளில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளில் எதற்கும் வகைசெய்யும் சட்டமுன்வடிவு அல்லது திருத்தம் எதனையும், ஆளுநரின் பரிந்துரையின் மீதல்லாமல், அறிமுகப்படுத்துதலோ கொண்டுவருதலோ ஆகாது; அவ்வாறு வகைசெய்யும் சட்டமுன்வடிவு எதனையும் ஒரு சட்டமன்ற மேலவையில் அறிமுகப்படுத்துதலும் ஆகாது:

வரம்புரையாக: வரி எதனையும் குறைப்பதற்காக அல்லது நீக்குவதற்காக வகைசெய்யும் ஒரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு இந்தக் கூறின்படியான பரிந்துரை எதுவும் வேண்டுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/104&oldid=1465442" இலிருந்து மீள்விக்கப்பட்டது