பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


(2) சட்டமுன்வடிவு அல்லது திருத்தம் எதுவும், அபராதங்களை அல்லது பிற பணத் தண்டங்களை விதிப்பதற்கு அல்லது உரிமங்களுக்கான கட்டணங்களையோ செய்யப்பட்ட பணிகளுக்கான கட்டணங்களையோ கோருவதற்கு அல்லது செலுத்துவதற்கு அது வகைசெய்கிறது என்ற காரணத்தால் மட்டுமோ உள்ளாட்சி அதிகாரஅமைப்பு அல்லது குழுமம் ஒன்று உள்ளாட்சி நோக்கங்களுக்காக வரி எதனையும் விதிப்பதற்கு, நீக்குவதற்கு, குறைப்பதற்கு, மாற்றுவதற்கு அல்லது ஒழுங்குறுத்துவதற்கு அது வகைசெய்கிறது என்ற காரணத்தாலோ மேலே கூறப்பட்ட பொருட்பாடுகளில் எதற்கும் வகைசெய்வதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

(3) ஒரு சட்டமுன்வடிவு, சட்டமாக இயற்றப்பட்டுச் செயற்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டால் ஒரு மாநிலத் திரள்நிதியத்திலிருந்து செலவு செய்யவேண்டிய நிலையை அது ஏற்படுத்துமாயின், அதனை ஓர்வு செய்யுமாறு மாநிலச் சட்டமன்றத்தின் அவை எதற்கும் ஆளுநர் பரிந்துரை செய்திருந்தாலன்றி அந்த அவை அதனை நிறைவேற்றுதல் ஆகாது.

பொதுவியலான நெறிமுறை

208. நெறிமுறை விதிகள் :

(1) மாநிலச் சட்டமன்றத்தின் அவை எதுவும், இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, அதற்குரிய நெறிமுறையையும் அலுவல் நடத்துமுறையையும் ஒழுங்குறுத்துவதற்கான விதிகளை வகுத்துக்கொள்ளலாம்.

(2). (1) ஆம் கூறின்படி விதிகளை வகுத்துக்கொள்ளும் வரையில், ஒரு மாநிலத்திற்கு நேரிணையான மாகாணத்தின் சட்டமன்றத்தைப் பொறுத்து, இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு செல்லாற்றலிலிருந்த நெறிமுறை விதிகளும் நிலையாணைகளும், ஒரு மாநிலச் சட்டமன்றத்தைப் பொறுத்துச் சட்டமன்றப் பேரவைத் தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, சட்டமன்ற மேலவைத் தலைவர் அவற்றில் செய்யும் மாற்றமைவுகளுக்கும் தழுவமைவுகளுக்கும் உட்பட்டு, செல்திறம் உடையன ஆகும்.

(3) சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலத்தில், ஆளுநர், சட்டமன்றப் பேரவைத் தலைவருடனும் சட்டமன்ற மேலவைத்தலைவருடனும் கலந்தாய்வு செய்த பின்பு, ஈரவைகளுக்குமிடையேயான செய்தித்தொடர்புகள் பற்றிய நெறிமுறை விதிகளை வகுக்கலாம்.

209. மாநிலச் சட்டமன்றத்தில் நிதி அலுவல் பற்றிய நெறிமுறையைச் சட்டத்தினால் ஒழுங்குறுத்துதல் :

ஒரு மாநிலச் சட்டமன்றம், நிதி அலுவல்களை உரிய காலத்தில் முடிக்கும் பொருட்டு, நிதி பற்றிய பொருட்பாடு எதன் தொடர்பாகவும் அல்லது மாநிலத் திரள்நிதியத்தினின்றும் பண ஒதுக்களிப்பிற்கான சட்டமுன்வடிவு எதன் தொடர்பாகவும், மாநிலச் சட்டமன்ற அவையின் அல்லது அவைகளின் நெறிமுறையையும் அலுவல் நடத்துமுறையையும் சட்டத்தினால் ஒழுங்குறுத்தலாம்; அவ்வாறு இயற்றப்பட்ட சட்டத்தின் வகையம் எதற்கும், 208 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின்படி மாநிலச் சட்டமன்ற அவையினால் அல்லது ஈரவைகளில் ஒன்றினால் வகுக்கப்பட்ட விதி எதுவும் அல்லது அந்த உறுப்பின் (2) ஆம் கூறின்படி மாநிலச் சட்டமன்றம் தொடர்பாகச் செல்திறம் உடைய விதி அல்லது நிலையாணை எதுவும் முரணாக இருப்பின், அவ்வாறு முரணாக இருக்கும் அளவிற்கு, அந்த வகையமே மேலோங்கி நிற்கும்.

210. சட்டமன்றத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி :

(1) XVII ஆம் பகுதியில் எது எவ்வாறிருப்பினும், 348ஆம் உறுப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, ஒரு மாநிலச் சட்டமன்ற அலுவல்கள், அந்த மாநிலத்தின் அரசு அலுவல் மொழியிலோ மொழிகளிலோ அல்லது இந்தியிலோ ஆங்கிலத்திலோ நடத்தப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக: மேற்சொன்ன மொழிகள் எதிலும் தம் கருத்தை தக்கவாறு எடுத்தியம்ப இயலாத உறுப்பினர் எவரையும், அவருடைய தாய்மொழியிலேயே அவையில் உரையாற்றுவதற்கு, சட்டமன்றப் பேரவைத் தலைவர் அல்லது சட்டமன்ற மேலவைத் தலைவர் அல்லது அத்தகையவராகச் செயலுறுகின்றவர் அனுமதிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/105&oldid=1465444" இலிருந்து மீள்விக்கப்பட்டது