பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


(2) மாநிலச் சட்டமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்தாலன்றி, இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து பதினைந்து ஆண்டுக்காலஅளவு கழிவுறுவதன் பின்பு, இந்த உறுப்பிலிருந்து "அல்லது ஆங்கிலத்தில்" என்னும் சொற்கள் நீக்கப்பட்டிருந்தால் எப்படியோ, அப்படியே இந்த உறுப்பு செல்திறம் உடையது ஆகும்:

வரம்புரையாக: இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலாயா, திரிபுரா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களைப் பொறுத்து, இந்தக் கூறில், "பதினைந்து ஆண்டு" என்னும் சொற்களுக்கு மாற்றாக, "இருபத்தைந்து ஆண்டு" என்னும் சொற்கள் அமைக்கப்பட்டிருந்தால் எப்படியோ, அப்படியே இந்தக் கூறு செல்திறம் உடையது ஆகும்:

மேலும் வரம்புரையாக: அருணாசலப் பிரதேசம், கோவா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களைப் பொறுத்து, இந்தக் கூறில், "பதினைந்து ஆண்டு" என்னும் சொற்களுக்கு மாற்றாக "நாற்பது ஆண்டு” என்னும் சொற்கள் அமைக்கப்பட்டிருந்தால் எப்படியோ, அப்படியே இந்தக் கூறு செல்திறம் உடையது ஆகும்.

211. சட்டமன்றத்தில் விவாதத்தின்மீது வரையறை :

உச்ச நீதிமன்றத்தின் அல்லது ஓர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், தம் கடமைகளை ஆற்றுகையில் அவர் நடந்துகொண்ட விதம் குறித்து விவாதம் எதுவும் மாநிலச் சட்டமன்றத்தில் நடைபெறுதல் ஆகாது.

212. சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரித்தல் ஆகாது :

(1) நெறிமுறையைப் பின்பற்றுவதில் முறைகேடு இருப்பதாகக் காரணம் காட்டி, மாநிலச் சட்டமன்றம் ஒன்றன் நடவடிக்கைகள் எவற்றின் செல்லுந்தன்மையையும் எதிர்த்து வாதிடுதல் ஆகாது.

(2) ஒரு மாநிலச் சட்டமன்றப் பதவியாளர் அல்லது உறுப்பினர் ஒருவர், அச்சட்டமன்ற நெறிமுறையையோ அலுவல் நடத்துமுறையையோ ஒழுங்குறுத்துவதற்காக அல்லது ஒழுங்கமைதியை நிலைநாட்டுவதற்காக, இந்த அரசமைப்பினாலோ அதன் வழியாலோ அவருக்கு உற்றமைந்துள்ள அதிகாரங்களைச் செலுத்துவது பொறுத்து, நீதிமன்றம் எதனின் அதிகாரவரம்பிற்கும் உட்பட்டவர் ஆகார்.

அத்தியாயம் IV
ஆளுநருக்குள்ள சட்டமியற்றும் அதிகாரம்

213. சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் இறுதி செய்யப்பட்டுள்ள காலத்தின்போது அவசரச்சட்டங்களைச் சாற்றம்செய்வதற்கு ஆளுநருக்குள்ள அதிகாரம் :

(1) ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் தொடர்நிலையிலுள்ள காலம் தவிர அல்லது ஒரு மாநிலத்தில் மேலவை உள்ளவிடத்து சட்டமன்ற ஈரவைகளின் கூட்டத்தொடர்களும் தொடர்நிலையிலுள்ள காலம் தவிர வேறு எச்சமயத்திலேனும் ஆளுநர், தாம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டியதை அவசியமாக்கும் சூழ்நிலைகள் உள்ளன என்று தெளிவுறக்காண்பாராயின், அச்சூழ்நிலைகளுக்கேற்பத் தேவையென்று தாம் கருதும் அவசரச்சட்டங்களைச் சாற்றம் செய்யலாம்:

வரம்புரையாக: அத்தகைய அவசரச்சட்டம் எதனையும்—

(அ)ஒரு சட்டமுன்வடிவு அதே வகையங்களைக் கொண்டிருந்தால் அதனைச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்குக் குடியரசுத்தலைவரின் முன் ஒப்பளிப்பு இந்த அரசமைப்பின்படி வேண்டுவதாக இருந்திருக்கும் எனில்; அல்லது (ஆ)ஒரு சட்டமுன்வடிவு அதே வகையங்களைக் கொண்டிருந்தால் அதனைக் குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக ஒதுக்கிவைப்பது அவசியம் என அவர் கருதியிருப்பார் எனில்; அல்லது
(இ)மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டம் ஒன்று அதே வகையங்களைக் கொண்டிருந்தால் குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக ஒதுக்கிவைத்து அது குடியரசுத்தலைவரின் ஏற்பிசைவையும் பெற்றிருந்தாலன்றி, இந்த அரசமைப்பின்படி செல்லுந்தன்மையற்றதாகிவிடும் எனில்

குடியரசுத்தலைவரின் நெறிவுறுத்தங்கள் இன்றி, ஆளுநர் சாற்றம்செய்தல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/106&oldid=1465452" இலிருந்து மீள்விக்கப்பட்டது