பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


(2). (1) ஆம் கூறின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல், பட்டியலில் கண்ட சாதிகளைச் சேர்ந்த, அல்லது, நேர்வுக்கேற்ப, பட்டியலில் கண்ட பழங்குடிகளைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

(3) ஒவ்வோர் ஊராட்சியிலும் நேரடித் தேர்தல் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய பதவியிடங்களின் (பட்டியலில் கண்ட சாதிகளையும் பட்டியலில் கண்ட பழங்குடிகளையும் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவியிடங்களின் எண்ணிக்கை உள்ளடங்கலாக) மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும், மற்றும் அத்தகைய பதவியிடங்கள், ஊராட்சியில் வெவ்வேறுபட்ட தேர்தல் தொகுதிகளுக்காக சுழற்சி முறையில் பகிர்ந்தொதுக்கப்படலாம்.

(4) கிராம நிலையில் அல்லது பிற நிலை எதிலும் ஊராட்சிகளின் தலைமையர் பதவி, மாநிலச் சட்டமன்றம் சட்டத்தினால் வகை செய்யலாகும் முறையில், பட்டியலில் கண்ட சாதியினருக்காகவும், பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காகவும், பெண்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக: மாநிலம் எதிலும், ஒவ்வொரு நிலையிலும், ஊராட்சிகளில், பட்டியலில் கண்ட சாதியினருக்காகவும், பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைமையர் பதவிகளின் எண்ணிக்கைக்கும், ஒவ்வொரு நிலையிலும், ஊராட்சிகளிலுள்ள பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கைக்கும் இடையிலான வீத அளவானது, மாநிலத்திலுள்ள பட்டியலில் கண்ட சாதியினரின் அல்லது மாநிலத்திலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினரின் மக்கள் தொகைக்கும் அந்த மாநிலத்தின் மொத்த மக்கட் தொகைக்கும் இடையிலான அதே விகிதத்தில் இருத்தல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக: ஒவ்வொரு நிலையிலும், ஊராட்சிகளிலுள்ள தலைமையர் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல், பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்:

இன்னும் வரம்புரையாக: இந்தக் கூறின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறுபட்ட ஊராட்சிகளுக்கு சுழற்சி முறையில் பகிர்ந்தொதுக்கப்படுதல் வேண்டும்.

(5). (1) ஆம் மற்றும் (2) ஆம் கூறுகளின்படி பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும் (4) ஆம் கூறின்படி (பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டவைகள் அல்லாத பிற) தலைமையர் பதவிகளை ஒதுக்கீடு செய்தல், 334 ஆம் உறுப்பில் குறித்துரைக்கப்பட்ட கால அளவு கழிவுறுவதன்பேரில், செல்திறம் அற்றுப் போகும்.

(6) இந்தப் பகுதியில் உள்ள எதுவும், குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சார்பாக எந்த நிலையிலுமான ஊராட்சி எதிலும் உள்ள பதவியிடங்களை அல்லது ஊராட்சிகளில் தலைமையர் பதவிகளை ஒதுக்கீடு செய்வதற்காக மாநிலச் சட்டமன்றம் வகை எதனையும் செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.

243உ. ஊராட்சிகள் முதலியவற்றின் காலஅளவு :

(1) ஒவ்வொரு ஊராட்சியும், அப்போதைக்குச் செல்லாற்றலில் உள்ள சட்டம் எதன்படியும் முன்னதாகவே கலைக்கப்பட்டாலன்றி, அதன் முதல் கூட்டத்திற்காகக் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்திருந்து வரும், மற்றும் அதற்கு மேலும் இருத்தல் ஆகாது;

(2) அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதனின் திருத்தம் எதுவும் அந்தத் திருத்தத்திற்கு ஒட்டி முன்பு செயற்பட்டு வந்த ஊராட்சியை (1) ஆம் கூறில் குறித்துரைக்கப்பட்ட அதன் கால அளவு கழிவுறும் வரை எந்த நிலையிலும் கலைக்கும் விளைவுடையது ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/124&oldid=1467647" இலிருந்து மீள்விக்கப்பட்டது