பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


(2) ஊராட்சியிலுள்ள அனைத்துப் பதவியிடங்களும், ஊராட்சிப் பரப்பிடங்களிலுள்ள ஆட்சி நிலவரைத் தேர்தல் தொகுதிகளிலிருந்து நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களால் நிரப்பப்படுதல் வேண்டும் மற்றும் இந்த நோக்கத்திற்காக, ஒவ்வோர் ஊராட்சிப் பரப்பிடமும், ஒவ்வொரு தேர்தல் தொகுதியின் மக்கள் தொகைக்கும் அதற்கு ஒதுக்கப்பட்ட பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள வீதமானது, கூடுமானவரையில், ஊராட்சிப் பரப்பிடம் எங்கணும் ஒருபடித்தாய் இருத்தல் வேண்டும் என்ற முறையில் ஆட்சி நிலவரைத் தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்படுதல் வேண்டும்.

(3) ஒரு மாநிலச் சட்டமன்றம், சட்டத்தினால்,

(அ) கிராம நிலையில் உள்ள ஊராட்சிகளின் இடைப்பட்ட நிலையிலுள்ள ஊராட்சிகளின் அல்லது இடைப்பட்ட நிலைகளில் ஊராட்சிகள் இல்லாத மாநிலத்தில், மாவட்ட நிலைகளிலுள்ள ஊராட்சிகளின் தலைமையர்களும்;

(ஆ) இடைப்பட்ட நிலைகளிலுள்ள ஊராட்சிகளின், மாவட்ட நிலையிலுள்ள ஊராட்சிகளின் தலைமையர்களும்;

(இ) ஓர் ஊராட்சியில், கிராம நிலையில் அல்லாத பிற நிலையில், ஊராட்சிப் பரப்பிடத்தை முழுவதுமாக அல்லது பகுதியாக உள்ளடக்கியிருக்கிற தேர்தல் தொகுதிகளைச் சார்பாற்றம் செய்கிற மக்களவையின் உறுப்பினர்களும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும்

(ஈ) (i) இடைப்பட்ட நிலையிலுள்ள ஊராட்சிப் பரப்பிடத்திற்குள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறவிடத்து, இடைப்பட்ட நிலையிலுள்ள ஊராட்சியில்;

(ii) மாவட்ட நிலையிலுள்ள ஊராட்சிப் பகுதிக்குள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறவிடத்து, மாவட்ட நிலையில் உள்ள ஊராட்சியில் மாநிலங்களவை உறுப்பினர்களும், மாநிலச் சட்டமேலவை உறுப்பினர்களும்

சார்பாற்றம் செய்வதற்கு வகை செய்யலாம்.

(4) ஊராட்சிப் பரப்பிடத்திலுள்ள ஆட்சிநிலவரைத் தேர்தல் தொகுதியிலிருந்து நேரடித் தேர்தல் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பினும் இல்லாவிடினும், ஊராட்சித் தலைமையரும், ஊராட்சியின் பிற உறுப்பினர்களும், ஊராட்சிகளின் கூட்டங்களில் வாக்களிக்க உரிமை உடையவர் ஆவர்.

(5) (அ) கிராமநிலையில் உள்ள ஊராட்சியின் தலைமையர், ஒரு மாநிலச் சட்டமன்றம், சட்டத்தினால் வகை செய்யலாகும் முறையில் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்; மற்றும்

(ஆ) இடைப்பட்ட நிலையிலுள்ள அல்லது மாவட்ட நிலையிலுள்ள ஊராட்சியின் தலைமையர், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாலும், அவர்களுக்கிடையேயிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.

243.ஈ. பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல்-

(1) ஒவ்வோர் ஊராட்சியிலும்,—

(அ) பட்டியலில் கண்ட சாதியினருக்காகவும்,

(ஆ) பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காகவும்

பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும், மற்றும் அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும், அந்த ஊராட்சியில் நேரடித் தேர்தல் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கைக்கும், இடையிலான வீத அளவானது, கூடுமானவரையில், அந்த ஊராட்சிப் பரப்பிடங்களில் உள்ள பட்டியலில் கண்ட சாதியினரின் அல்லது அந்த ஊராட்சிப் பரப்பிடங்களில் உள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினரின் மக்கள் தொகைக்கும் அந்தப் பரப்பிடத்திலுள்ள மொத்த மக்கட்தொகைக்கும் இடையிலான அதே வீதத்தில் இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகைய பதவியிடங்கள் ஊராட்சியில் வெவ்வேறு தேர்தல் தொகுதிகளுக்காக சுழற்சி முறையில் பகிர்ந்தொதுக்கப்படலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/123&oldid=1467646" இலிருந்து மீள்விக்கப்பட்டது