பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


[1]பகுதி IX
ஊராட்சிகள்

243. பொருள்வரையறைகள் :

இந்தப் பகுதியில், தறுவாயின் தேவை வேறானாலன்றி,-

(அ) "மாவட்டம்”, என்பது, ஒரு மாநிலத்திலுள்ள மாவட்டம் என்று பொருள்படும்; (ஆ) "கிராமசபை" என்பது, ஒரு கிராமத்தைப் பொறுத்தநிலையில், ஊராட்சி பரப்பிடத்திற்குள் அடங்கியுள்ள கிராமம் தொடர்பாக வாக்காளர் பட்டியல்களில் பதிவு செய்யப்பட்ட நபர்களைக் கொண்டதாக உள்ள குழுமம் என்று பொருள்படும்; (இ)"இடைப்பட்டநிலை' என்பது, இந்தப் பகுதியின் நோக்கங்களுக்காக, பொது அறிவிக்கை வாயிலாக, இடைப்பட்ட நிலை என மாநில ஆளுநரால் குறித்துரைக்கப்படும் கிராம மற்றும் மாவட்ட நிலைகளுக்கு இடைப்பட்ட நிலை என்று பொருள்படும்;
(ஈ) “ஊராட்சி” என்பது, ஊரகப் பரப்பிடங்களுக்காக, 243ஆ உறுப்பின்படி அமைக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனம் ஒன்று (அவை எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) என்று பொருள்படும்;
(உ) “ஊராட்சிப் பரப்பிடம்" என்பது, ஓர் ஊராட்சியின் ஆட்சி நிலவரைப் பரப்பிடம் என்று பொருள்படும்;
(ஊ) "மக்கள் தொகை" என்பது, தொகை விவரங்கள் கண்டறிந்து வெளியிடப்பட்டுள்ள கடைசிமுறை மக்கள் கணக்கெடுப்பின்படியாகும் மக்கள்தொகை என்று பொருள்படும்;
(எ) “கிராமம்” என்பது, இந்தப் பகுதியின் நோக்கங்களுக்காக, ஆளுநரால் பொது அறிவிக்கை வாயிலாக கிராமம் என குறித்துரைக்கப்படும் கிராமம் என்று பொருள்படும்; மற்றும் அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட கிராமங்களின் தொகுப்பை உள்ளடக்கும்.

243அ. கிராம சபை :

ஒரு கிராம சபை, ஒரு மாநிலச் சட்டமன்றம் கிராம நிலையில் சட்டத்தினால் வகை செய்யும் அதிகாரங்களைச் செலுத்தலாம் மற்றும் செயற்பணிகளைப் புரியலாம்.

243ஆ. ஊராட்சிகளை அமைத்தல் :

(1) ஒவ்வொரு மாநிலத்திலும், கிராம நிலையிலும், இடைப்பட்ட மற்றும் மாவட்ட நிலைகளிலும், இந்தப் பகுதியின் வகையங்களுக்கிணங்க ஊராட்சிகள் அமைக்கப்படுதல் வேண்டும்.

(2). (1) ஆம் கூறில் எது எவ்வாறிருப்பினும், இடைப்பட்ட நிலையிலுள்ள ஊராட்சிகள், இருபது இலட்சத்திற்கு மேற்படாத மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற ஒரு மாநிலத்தில் அமைக்கப்படுதல் ஆகாது.

243இ. ஊராட்சிகளின் கட்டமைப்பு :

(1) இந்தப் பகுதியின் வகையங்களுக்கு உட்பட்டு, ஒரு மாநிலச் சட்டமன்றம், சட்டத்தினால், ஊராட்சிகளின் கட்டமைப்பு குறித்த வகையங்களைச் செய்யலாம்:

வரம்புரையாக: எந்த நிலையிலும், ஊராட்சியின் ஆட்சி நிலவரைப் பரப்பிடத்திலுள்ள மக்கள் தொகைக்கும், அந்த ஊராட்சியில் தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டிய பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வீதமானது, கூடுமானவரையில், மாநிலம் எங்கணும் ஒருபடித்தாய் இருத்தல் வேண்டும்.

  1. 1992 ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து மூன்றாம் திருத்தம்) சட்டத்தின் 2ஆம் பிரிவினால் (1-6-1993 முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/122&oldid=1467643" இலிருந்து மீள்விக்கப்பட்டது